டில்லியில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் கைது: விரைவில் நாடு கடத்த முடிவு
டில்லியில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் கைது: விரைவில் நாடு கடத்த முடிவு
UPDATED : ஏப் 11, 2025 09:44 PM
ADDED : ஏப் 11, 2025 09:39 PM

புதுடில்லி: தலைநகர் டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
டில்லியில் சட்ட விரோதமாக தங்கி உள்ள வங்கதேசத்தவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கைகளில் போலீசார் மும்முரமாக உள்ளனர். இதற்காக ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த மாதம் 16ம் தேதி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தில்வார் கான்(48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், தான் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் எனக்கூறியுள்ளார். ஆனால், ஆவணங்களை பரிசோதனை செய்ததில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து டில்லி என்.சி.ஆர் பிராந்தியத்தில் உள்ள லக்ஷ்மி நகர், லஜ்பத் நகர், கிருஷ்ணா நகர், சீமாபுரி, ஷலிமார் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருந்தவர்களின் ஆவணங்களை சோதனை செய்தனர்.
அதில், பியூட்டி பேகம்(39), ரபிகுல்(43) தவுஹித்(20) , முகமது அசார்(28), ஜாகிர் மாலிக்(40) மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி டில்லியில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார் 7 பேரையும் விரைவில் நாடு கடத்துவதற்கான பணிகளில் மும்முரமாக உள்ளனர்.