ADDED : ஜூலை 08, 2025 12:17 AM

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பணம் மற்றும் நகைகளுடன் கூட்டுறவு வங்கி சகதியில் புதைந்துள்ளது.
கடந்த 20ம் தேதி பருவமழை துவங்கியதில் இருந்து, ஹிமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்யும் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது.
மண்டி, சிம்லா, சிர்மாவுர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த 20ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் வரை 23 திடீர் வெள்ளப்பெருக்குகளும், அதைத் தொடர்ந்து 19 மேக வெடிப்பு சம்பவங்களும், 16 நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களால் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றும் கனமழை தொடர்ந்தது. மண்டி மாவட்டம் சில்பாதானி பகுதியில் பெய்த கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டன; சிறிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
துனாக் பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் தரைத்தளத்தில், கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தால், இந்த கட்டடத்தின் தரைத்தளம் முழுதும் தண்ணீர் மற்றும் சகதியால் மூடப்பட்டுள்ளது. முதல் மாடி வரை சகதி தேங்கி உள்ளது.
இதனால், கூட்டுறவு வங்கியில் இருந்த பணம் மற்றும் லாக்கர்களில் இருந்த நகைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. அவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானதை அடுத்து, நேற்று வங்கி முன் ஏராளமானோர் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இது குறித்து கூட்டுறவு வங்கி மேலாளர் மோகன் கூறுகையில், ''இடிபாடுகளை அகற்றிய பின்னரே, வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளின் நிலை குறித்து தெரிய வரும். யாரும் பதற்றமடைய வேண்டாம்,'' என்றார்.

