ADDED : டிச 01, 2024 11:10 PM
ஆனேக்கல்,: கிராமத்தினரே சொந்த பணத்தை செலவிட்டு செய்த பணிகளுக்கு, போலியான பில்கள் தயாரித்து, பணம் பெற்ற கிராம பஞ்சாயத்து அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பெங்களூரு, ஆனேக்கல்லின் மன்டபா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சி.கே.பாளையாவில் சாலை பழுது பார்க்கும்படி கிராமத்தினர் பல முறை கோரியும், அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. எனவே, கிராமத்தினர் தாங்களே பணம் திரட்டி பணிகளை நடத்தினர்.
ஆனால் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ரமேஷ், அந்த பணிகளை ஒப்பந்ததாரரை வைத்து நடத்தியதாக, பொய்யான பில்களை தயாரித்து 3.30 லட்சம் பெற்று கொண்டார்.
இதையறிந்த கிராமத்தினர், ஒப்பந்ததாரர், கிராம வளர்ச்சி துறையிடம் புகார் அளித்தனர். துறை ரீதியான விசாரணையில், அதிகாரி ரமேஷின் மோசடி உறுதியானது. எனவே அவரை சஸ்பெண்ட் செய்து, சில நாட்களுக்கு முன் கிராம வளர்ச்சி துறை உத்தரவிட்டது.
இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு வடக்கு தாலுகாவின், ஆலுார் கிராம பஞ்சாயத்துக்கு, தற்காலிக பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்ற ரமேஷுக்கு அனுமதி அளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்துகின்றனர்.