பிரியங்கா பாணியில் பன்சூரி ஸ்வராஜ்; சூடுபிடிக்கும் 'ஹேண்ட் பேக்' அரசியல்
பிரியங்கா பாணியில் பன்சூரி ஸ்வராஜ்; சூடுபிடிக்கும் 'ஹேண்ட் பேக்' அரசியல்
ADDED : ஏப் 23, 2025 05:08 AM

புதுடில்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ., - எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், 'நேஷனல் ஹெரால்டு கொள்ளை' என்ற வாசகம் அச்சிடப்பட்ட கைப்பையை நேற்று எடுத்து வந்தார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் மீது அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 'இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என, காங்., கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டில்லியில் நேற்று, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான பார்லி., கூட்டுக்குழுவின் கூட்டம், அதன் தலைவரும், பா.ஜ., - எம்.பி.,யுமான பி.பி.சவுத்ரி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்க, கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள புதுடில்லி தொகுதி பா.ஜ., - எம்.பி.,யும், மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகளுமான பன்சூரி ஸ்வராஜ் வந்தார்.
அப்போது, அவர் எடுத்து வந்த ஹேண்ட் பேக்கில், சிவப்பு எழுத்துகளில், 'நேஷனல் ஹெரால்டு கொள்ளை' என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு நீதி கேட்டு, இந்த பேக்கை பன்சூரி ஸ்வராஜ் எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த சோனியாவின் மகளும், வயநாடு தொகுதி காங்., - எம்.பி.,யுமான பிரியங்கா, பாலஸ்தீனம், வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு நீதிகேட்கும் வகையில் வாசகங்கள் அச்சிடப்பட்ட ஹேண்ட் பேக்குகளை எடுத்து வந்தார்.
தற்போது அவரது பாணியை பின்பற்றியே, காங்கிரசுக்கு பன்சூரி ஸ்வராஜ் பதிலடி கொடுத்துஉள்ளார்.

