ADDED : ஜூன் 29, 2025 01:55 AM

புதுடில்லி: 'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி பராக் ஜெயினை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உளவு அமைப்பாக, 'ரா' எனப்படும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு செயல்பட்டு வருகிறது. நம் நாட்டுக்கு எதிரான வெளிநாடுகளின் சதித்திட்டம், அவர்களின் செயல்பாடு, வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள் குறித்த தகவல்களை, இந்த பிரிவு நம் நாட்டுக்கு அளித்து வருகிறது.
இதன் தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம், நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ரா உளவு அமைப்பின் தலைவராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ல் பதவியேற்கும் அவர், இரண்டு ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார்.
யார் இவர்?
பஞ்சாப் கேடரைச் சேர்ந்த 1989 பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான பராக் ஜெயின், உளவுத்துறை மற்றும் வெளிநாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டவர். உளவுத்துறையில் இவரை, 'நன்கு துப்பறிபவர்' என அழைப்பர்.
பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு மூளையாகச் செயல்பட்டவரும் இவரே. இவர் அளித்த துல்லிய தகவல்களின் அடிப்படையிலேயே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் படைகள் அழித்தன.
மேலும் இவர், ஜம்மு - காஷ்மீரில் அதிக காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதுதவிர, பஞ்சாப் டி.ஜி.பி., உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் பராக் ஜெயின் வகித்துள்ளார்.