பிரதமர் மோடிக்கு விருது அளித்து கவுரவித்த பார்படாஸ்
பிரதமர் மோடிக்கு விருது அளித்து கவுரவித்த பார்படாஸ்
ADDED : மார் 06, 2025 10:39 PM

புதுடில்லி: பார்படாஸ் நாட்டின் மதிப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கோவிட் காலத்தில் அளிக்கப்பட்ட உதவிக்காகவும், பிராந்திய தலைமையை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டு பிரதமர் அமோர் மோடலி வழங்கிய விருதை, இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மர்ஹெரிட்டா பெற்றுக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த விருதானது, இரு நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் நட்புறவை எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஆண்டு நவ.,20 ல் கயானாவில் நடந்த 2வது இந்தியா கரிகோம் தலைவர்கள் மாநாட்டின் போது பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்குவதாக பார்படாஸ் அமோர் மோடலி அறிவித்து இருந்தார். கோவிட் காலத்தின் போது, அவரது தலைமைத்துவத்திற்காகவும், மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.