ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி
ADDED : மே 10, 2024 05:22 PM

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்துவதில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
லோக்சபாவுக்கு முதல் இரண்டு கட்ட ஓட்டுப்பதிவுக்கான இறுதி ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது. இது விவாதத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ' இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கார்கே எழுதிய கடிதத்தில், 'இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் முரண்பாடுகள் இருக்கின்றன. ஓட்டுப்பதிவு புள்ளி விவரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால் தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுகின்றன. எனது 52 ஆண்டுகால தேர்தல் வாழ்வில் இறுதி நேரத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்ததை நான் பார்த்தது இல்லை''. எனக்கூறியிருந்தார்.
இதனை மறுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் தலைவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்துவதில், குழப்பம் மற்றும் இடையூறை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அரசியல் கட்சிகளுக்கு இடையே கடிதம் எழுதப்பட்டு இருந்தாலும், அது பொது வெளியில் பகிரப்பட்டு உள்ளது. இது சந்தேகம் மற்றும் பிரச்னை ஏற்படுவதுடன் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் மனு
இதனிடையே அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் மற்றும் டிஆர்பாலு உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், '' ஓட்டுப்பதிவு விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். எவ்வளவு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டளித்தனர் என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.