கிரிக்கெட் 'பேட்ஸ்மேன்' போல் இருங்கள்: பிரதமர் நரேந்திர மோடி
கிரிக்கெட் 'பேட்ஸ்மேன்' போல் இருங்கள்: பிரதமர் நரேந்திர மோடி
ADDED : பிப் 11, 2025 06:27 AM

புதுடில்லி; ''கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் போடும் கூச்சல்களை காதில் வாங்காமல், அடுத்த பந்தை எதிர்கொள்வதில் முழு கவனம் செலுத்தும், 'பேட்ஸ்மேன்' போல, தேர்வு அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
'பரிக் ஷா பே சர்ச்சா' என்ற பெயரில், 10வது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமான கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி, 2018 முதல் நடத்தி வருகிறார்.
இதன், எட்டாம் ஆண்டு கலந்துரையாடல் நிகழ்வு டில்லியில் உள்ள சுந்தர் தோட்டத்தில் நேற்று நடத்தது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 35 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வு, 'யுடியூப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேரலையில் ஒளிபரப்பானது. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இந்த நிகழ்ச்சியை பார்த்தனர்.
அதில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை அளித்ததுடன், ஆழமான கலந்துரையாடலை மோடி நிகழ்த்தினார். அவர் பேசியதாவது: அறிவு - தேர்வு ஆகியவை இரு வெவ்வேறான அம்சங்கள். தேர்வு, வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமான முடிவல்ல. 10வது, பிளஸ் - 2 பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால் வாழ்க்கையே பாழாகிவிடும் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.
குறைந்த மதிப்பெண் மீதான பதற்றத்தை இந்த சமூகம் தான் உருவாக்குகிறது. எனவே அதை நினைத்து கவலைபடாமல், தேர்வுக்கு தயாராகுங்கள். இது போன்ற அழுத்தங்களை கிரிக்கெட் பேட்ஸ்மேன் போல எதிர்கொள்ள வேண்டும். கிரிக்கெட் மைதானத்தில் கடைசி ஓவர் விளையாடும் பேட்ஸ்மேன் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பார்.
அடுத்த பந்தில் நான்கு அடிக்க வேண்டும் என, ரசிகர்கள் கூச்சலிடுவர். அந்த நேரத்தில், பவுன்டரி பற்றி கவலைப்படாமல், அடுத்த பந்தை நோக்கி அவர் முழு கவனத்துடன் இருப்பார். அப்படி தான் மாணவர்களும் தேர்வு அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல, தங்கள் பிள்ளைகளின் படிப்பை வைத்து பெருமை பேசவேண்டும் என பெற்றோர் நினைக்கூடாது. அவர்களை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

