விவசாயி என்பதில் பெருமைப்படுங்கள்! மனுதாரருக்கு நீதிபதி 'அட்வைஸ்'
விவசாயி என்பதில் பெருமைப்படுங்கள்! மனுதாரருக்கு நீதிபதி 'அட்வைஸ்'
ADDED : ஜன 12, 2024 11:28 PM
பெங்களூரு: ''விவசாயி ஆவது தவறில்லை. உலகின் மிகவும் புராதன தொழில் விவசாயம். இதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள வேண்டும்,'' என, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்ன வராலே தெரிவித்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மடபா தாலுகா, உப்பினங்கடி அடுத்த கவுக்கிராடி கிராமத்தில் முறைகேடாக கட்டடம் கட்டுவதை எதிர்த்து, ஒரு சமூக ஆர்வலர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி பிரசன்ன வராலே, நீதிபதி தீக் ஷித் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவில், தான் என்ன தொழில் செய்கிறேன் என்பதை, மனுதாரர் குறிப்பிடவில்லை. இதனால், மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு, 'அவர் ஒரு விவசாயி' என்று மிகவும் சங்கடத்துடன் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.
தலைமை நீதிபதி கூறுகையில், ''உங்கள் தொழிலை சொல்வதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? விவசாயி ஆவது தவறில்லை. உலகின் மிகவும் புராதன தொழில் விவசாயம். இதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
அப்போது, நீதிபதி தீட்சித், கோடி கல்விகளிலேயே விவசாயத்தை விட சிறந்தது எதுவுமில்லை என்ற கவிஞர் சர்வக்ஞரின் கவிதையை குறிப்பிட்டார்.
அங்கிருந்த மூத்த வக்கீல் நாகானந்தா கூறுகையில், ''ஆமாம் விவசாயம் சிறந்தது மட்டுமின்றி, வரியும் இல்லை. வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனையும் இருக்காது,'' என்றார்.