ADDED : மே 01, 2025 03:56 AM

பெங்களூரு : கர்நாடகாவில், பீர் பாட்டில்களுக்கான கலால் வரியை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால், பீர் விலை, பாட்டிலுக்கு 10 ரூபாய் உயரும் என தெரிகிறது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 2023 - 24ம் ஆண்டுகளில் பீர் விலை உயர்த்தப்பட்டது. இரண்டு முறை பீர் விலை உயர்த்தப்பட்டதால் மதுப்பிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், பீர் வகைகளின் மீதான கலால் வரியை, 10 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், 'பிரீமியம் பிராண்டு'களின் பீர் விலை, பாட்டிலுக்கு 10 ரூபாயும்; உள்ளூர் பிராண்டுகளின் பீர் விலை, பாட்டிலுக்கு 5 ரூபாயும் உயர உள்ளது. இது மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தற்போது, மாநிலத்தில் பீரின் மீதான உற்பத்தி செலவில், 195 சதவீதம் வரியாக மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இதில், 10 சதவீதம் உயர்த்தி, 205 சதவீதமாக மாற்றப்பட உள்ளது.