கோவை மாஸ்டர் பிளான் தயாரிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும்: பழனிசாமி
கோவை மாஸ்டர் பிளான் தயாரிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும்: பழனிசாமி
ADDED : ஆக 27, 2025 05:49 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள, கோவை மாஸ்டர் பிளான் 2041ல், நிலப்பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியுடன், நான்கு நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய, 1,531 சதுர கிலோ மீட்டருக்கு, புதிய கோவை மாஸ்டர் பிளானை, நகர ஊரமைப்பு மற்றும் உள்ளூர் திட்டக் குழுமம் தயாரித்துள்ளது.
பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், முழுமையாக நடத்தப்படவில்லை. இச்சூழ்நிலையில் பல்வேறு குளறுபடிகளை கொண்ட மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, குடியிருப்பு நில வகைப்பாட்டில் உள்ள நிலங்களை, விவசாயம் மற்றும் தொழில் பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
ஏற்கனவே வளர்ந்த தொழில் நகரமான கோவை நகரப் பகுதியில், நில மதிப்பீட்டுத் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நில மாற்றம் செய்ய அனுமதி வழங்குவது, ஊழலுக்கு வழிவகுக்கும்.
நில வகைப்பாடு மாற்றத்தில், தி.மு.க.,வின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் நிறுவனம் மற்றும் தி.மு.க., குடும்ப உறவுகளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிலங்கள் என, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், குடியிருப்பு மனை நில வகைப்பாட்டிலேயே இருக்கும் வகையில், 'கோவை மாஸ்டர் பிளான் 2041' உருவாக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே, தற்போது வெளியிட்டுள்ள, 'கோவை மாஸ்டர் பிளான் 2041'ன்படி, நகர ஊரமைப்பு திட்டத்தில் இணைத்துள்ள பகுதிகளில், நில வகைப்பாடு மாற்றங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். முறையான திருத்தங்கள் செய்து, புதிய கோவை மாஸ்டர் பிளான் 2041ஐ வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.