ADDED : டிச 14, 2024 11:05 PM
பெங்களூரு: பெங்களூரின் செல்லகட்டாவில் இருந்து ஒயிட்பீல்டு நோக்கிச் சென்ற ரயிலில், உடல் ஊனமுற்ற 45 வயது நபர் ஒருவர் பயணம் செய்தார். திடீரென அந்த நபர், ஒவ்வொரு பயணியரிடமும் சென்று, 'என் உடல் ஊனமாக உள்ளது. தயவு செய்து பிச்சை போடுங்கள்' என்று மன்றாடத் துவங்கினார்.
அவருக்கு சில பயணியர் பணம் கொடுத்துள்ளனர். ஒரு சிலர் அந்த நபரின் நடவடிக்கையால் முகம் சுழித்தனர். 'நீங்கள் எப்படி டிக்கெட் எடுத்தீர்கள்?' என, சில பயணியர் கேட்டபோது, 'மொபைல் போனில் க்யு.ஆர்.கோடை ஸ்கேன் செய்து, டிக்கெட் எடுத்தேன்' என அவர் கூறி உள்ளார்.
ஒரு ரயில் நிலையத்தில் அந்த நபர் இறங்கிச் சென்றுவிட்டார். ரயிலுக்குள் அவர் பிச்சை எடுத்ததை, சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோவை பார்ப்பவர்கள், மெட்ரோ ரயிலுக்குள் பிச்சை எடுக்க அனுமதி கிடைத்து விட்டதா என, கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.