பொருளாதார குற்றவாளி மெஹுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க பெல்ஜியம் நீதிமன்றம் மறுப்பு
பொருளாதார குற்றவாளி மெஹுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க பெல்ஜியம் நீதிமன்றம் மறுப்பு
ADDED : ஆக 31, 2025 02:13 AM

புதுடில்லி: நம் நாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளி மெஹுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க பெல்ஜியம் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர், 13,500 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.
கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவாவுக்கு முதலில் சென்ற மெஹுல் சோக்சி, பின் அங்கிருந்து, பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றார்.
நம் விசாரணை அமைப்புகளின் கோரிக்கையின்படி, 2019ல், பிரிட்டனின் லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, நம் நாட்டுக்கு நாடு கடத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதே போல, சி.பி.ஐ., கோரிக்கையின்படி, ஏப்., 11ல் பெல்ஜியத்தில் மெஹுல் சோக்சியை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். நான்கு மாதங்களுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, கடந்த 22ல், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மெஹுல் சோக்சி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மெஹுல் சோக்சிக்கு ஜாமின் வழங்கினால், வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது' என, சி.பி.ஐ., சார்பில் பெல்ஜியம் அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
இதை கேட்ட நீதிமன்றம், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பொருளாதார குற்றவாளி மெஹுல் சோக்சியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, செப்டம்பரில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

