தயாராகுது சிறையில் அறை; விரைவில் நாடு கடத்தப்படுகிறார் வைர வியாபாரி மெஹுல் சோக்சி
தயாராகுது சிறையில் அறை; விரைவில் நாடு கடத்தப்படுகிறார் வைர வியாபாரி மெஹுல் சோக்சி
ADDED : டிச 10, 2025 07:36 AM

புதுடில்லி: வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளார். இதற்காக சிறையில் தனி அறை தயார் செய்யப்பட்டு வருகிறது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து வைர வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019ல் கைது செய்யப்பட்டார்.
மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பி சென்றார். பின்னர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சி நடந்தது. தற்போது மெஹுல் சோக்சி பெல்ஜியம் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து கடைசி முயற்சியாக, பெல்ஜியம் நாட்டு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.
சோக்சியின் கோரிக்கையை சுப்ரீம்கோர்ட் நிராகரித்து இந்தியாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இதனால் சோக்சி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளார். இதற்காக சிறையில் தனி அறை தயார் செய்யப்பட்டு வருகிறது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவர் மும்பையில், அல்லது டில்லியில் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

