பலனடைந்தவர் பெயர் தெரியாவிட்டாலும் பினாமி சொத்து பறிமுதல் செய்யலாம்: சொத்து பரிவர்த்தனை சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
பலனடைந்தவர் பெயர் தெரியாவிட்டாலும் பினாமி சொத்து பறிமுதல் செய்யலாம்: சொத்து பரிவர்த்தனை சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஜன 15, 2025 08:46 AM
புதுடில்லி; உத்தர பிரதேசத்தின் லக்னோவில், சில சொத்துக்களை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்தின் பணிபுரியும் அலுவலக உதவியாளர் பெயரில் அந்த சொத்துக்கள் வாங்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி, வருமான வரித்துறை லக்னோ கிளையின் பினாமி சொத்து தடுப்புப் பிரிவு, 3.47 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்களை முடக்கியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த, பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு சட்ட தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவு:
இந்த குறிப்பட்ட சம்பவத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலக உதவியாளர் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கான நிதி எங்கிருந்து, யாரால் கொடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த சொத்துக்கள் பினாமி சொத்துக்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், இந்த பினாமி பரிவர்த்தனையால் பலன் அடைந்தது யார் என்பது உறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு பலன் அடைந்தவரின் பெயர் தெரியாதபட்சத்தில், பினாமி சொத்துக்களை முடக்கக் கூடாது என்று வாதிடப்பட்டுள்ளது; இதை ஏற்க முடியாது.
ஏற்கனவே பல நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில், பினாமி சொத்துக்களில் பலன் அடைந்தவர் பெயர் தெரியாவிட்டாலும், சொத்துக்களை முடக்க முடியும் என்பது தெளிவாக உள்ளது. இந்த நடவடிக்கைகளின்போது, அந்த சட்டப் பிரிவையும் சேர்த்திருக்க வேண்டும்.
இதைத் தவிர, ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலக உதவியாளர் பெயரில் உள்ள மற்ற சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அலுவலக உதவியாளர் பெயரில் இருந்த மற்ற சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய வருமான வரித் துறையின் லக்னோ கிளை, 5.68 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்ற சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது.