ADDED : பிப் 22, 2024 11:05 PM

பெங்களூரு: பா.ஜ.,வின் கோட்டையான பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியில் போட்டியிட ஐந்து பேரின் பெயரை காங்கிரஸ் பரிசீலத்து வருகிறது.
பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதி உதயமானது முதல், பா.ஜ.,வின் பி.சி.மோகன் தொடர்ந்து மூன்று முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.
பா.ஜ.,வின் கோட்டை என்று அழைக்கப்படும் இத்தொகுதியில், காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சி.வி.ராமன் நகர் - தனி, ராஜாஜி நகர், மஹாதேவபுரா - தனி ஆகிய தொகுதிகளில் பா.ஜ.,வும்;
சர்வக்ஞ நகர், சிவாஜி நகர், சாந்தி நகர், காந்தி நகர், சாம்ராஜ்பேட் ஆகிய தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார்.
இத்தொகுதியில் தமிழர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர்களின் ஓட்டுகளை பெற, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
எனவே, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபாட், சிவாஜி நகர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் ஹர்ஷத், சாம்ராஜ்பேட் எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கான், எம்.எல்.சி., ஹரிபிரசாத், காங்கிரஸ் தேசிய செயலர் மன்சூர் அலி கான் ஆகியோரில் ஒருவரை களமிறக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
முகமது நலபாட்: சாந்தி நகர் எம்.எல்.ஏ., ஹாரிசின் மகன் முகமது நலபாட். இவர், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். துணை முதல்வர் சிவகுமாருக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். இவரை வேட்பாளராக்குவதில் சிவகுமாரின் ஆசி இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்று மகனுக்கு சீட் கிடைக்க, புதுடில்லியில் மேலிட தலைவர்களிடம் பேசி வருகிறார்.
ரிஸ்வான் அர்ஷத்: கடந்த இரண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ரிஸ்வான் அர்ஷத் தோல்வியடைந்தார். கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சிவாஜி நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியின் நிலவரம், ஜாதி கணக்கீடு, பூத் தொடர்பான புள்ளி விபரங்கள் இவருக்கு அத்துப்பிடி. காங்கிரசின் முதல் 'சாய்ஸ்' இவராக உள்ளார். ஆனாலும், லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜமிர் அகமது கான்: காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, பெங்களூரு சென்ட்ரல் தொகுதி காங்கிரசுக்கு கடினமான தொகுதி என குறிப்பிடவில்லை.
சாம்ராஜ்பேட்டை எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கானின் பெயரும் இதில் அடிபடுகிறது.
அவரும், பெங்களூரு சென்ட்ரல் தொகுதி அரசியலில் தனக்கு ஈடுபாடு இல்லை. கட்சி யாரை நிறுத்தினாலும், அவர் வெற்றிக்காக பாடுபடுவேன் தெரிவித்துவிட்டார்.
ஹரிபிரசாத்: கடந்த லோக்சபா தேர்தலில் பெங்களூரு தெற்கில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஹரிபிரசாத், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் எம்.எல்.சி.,யாக உள்ளார்.
இவரும், பெங்களூரு சென்ட்ரலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.
ஆனால், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், சித்தராமையா மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதால், கட்சியின் முக்கிய தலைவர்கள் இவருக்கு எதிராக உள்ளனர். எனவே அவருக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
மன்சூர் அலி கான்: காங்கிரஸ் மூத்த தலைவர் ரஹ்மான் கானின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் செயலருமான மன்சூர் அலி கானும், சீட் பெற முயற்சித்து வருகிறார்.
கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், தொகுதியில் உள்ள ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், ஜாதி கணக்கின் அடிப்படையில், தற்போதைய தகவல்கள், ரிஸ்வான் அர்ஷத்தை போட்டியிட, காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைக்கலாம் என்று கூறப்படுகிறது.