பெங்., ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி., இடைத்தேர்தலில் காங்., வெற்றி
பெங்., ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி., இடைத்தேர்தலில் காங்., வெற்றி
ADDED : பிப் 21, 2024 08:40 AM

பெங்களூரு : பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி., பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரசின் புட்டண்ணா, 1,507 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி.,யாக இருந்த பா.ஜ.,வின் புட்டண்ணா, கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். பின், ராஜாஜிநகர் தொகுதியில், காங்., வேட்பாளராக களமிறங்கி தோல்விஅடைந்தார்.
காலியாக இருக்கும் இந்த பதவிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக புட்டண்ணா; பா.ஜ., ஆதரவுடன் ம.ஜ.த., வேட்பாளராக ரங்கநாத் உட்பட 9 பேர் போட்டியிட்டனர்.
பெங்களூரு, பெங்., ரூரல், ராம்நகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 7,141 ஆண்கள், 12,030 பெண்கள், ஒரு திருநங்கை என வாக்காளர் பட்டியலில் மொத்தம் 19,172 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள், ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள்.
இம்மாதம் 16ம் தேதி நடந்த ஓட்டுப்பதிவின் போது, 6,504 ஆண்கள், 10,040 பெண்கள் என 16,544 பேர் ஓட்டுப்போட்டனர்.
பதிவான ஓட்டு சீட்டுகள், பெங்களூரு அம்பேத்கர் சாலையில் உள்ள அரசு கலை கல்லுாரியில் நேற்று காலை 8:00 மணி முதல் எண்ணப்பட்டன. ஏழு மேஜைகள் போடப்பட்டிருந்தன.
மொத்தம் மூன்று சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணா முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக, புட்டண்ணா 8,260 ஓட்டுகளும்; ம.ஜ.த.,வின் ரங்கநாத், 6,753 ஓட்டுகளும் பெற்றனர். பா.ஜ.,விடமிருந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.
இதையடுத்து, 1,507 ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெளியே வந்த அவரை, அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த டெம்போவில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இவரது பதவி காலம், 2026 நவம்பர் 11ம் தேதி வரை இருக்கும். மேலவையில் காங்கிரஸ் பலம் அதிகரிக்கும்.
கடந்த 2020ல் நடந்த தேர்தலில் புட்டண்ணா, பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, 7,335 ஓட்டுகள் பெற்றார். ம.ஜ.த., வேட்பாளர் ரங்கநாத் 5,107 ஓட்டுகள் பெற்றார். வித்தியாசம் 2,228.
எம்.எல்.சி., இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணா வெற்றி பெற்றுள்ளார். 9 மாத காங்கிரஸ் ஆட்சி மீது, வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இந்த வெற்றி. இதன் மூலம் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.
சித்தராமையா
முதல்வர்

