ரூ.39.20 கோடியில் 'ஹஜ்' இல்லம்; ஹிந்து முன்னணி எதிர்ப்பு
ரூ.39.20 கோடியில் 'ஹஜ்' இல்லம்; ஹிந்து முன்னணி எதிர்ப்பு
UPDATED : டிச 17, 2025 05:18 AM
ADDED : டிச 17, 2025 04:19 AM

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு, சென்னை நங்கநல்லுார், ஜி.எஸ்.டி., சாலையில், 'ஹஜ் இல்லம்' கட்ட, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர் வசதிக்காக, சென்னை, ஜி.எஸ்.டி., சாலை, நங்கநல்லுார் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று, முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில், ஹஜ் இல்லத்திற்கு, ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அங்கு, 39.20 கோடி ரூபாயில் ஹஜ் இல்லம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த நிலத்தில் ஹஜ் இல்லம் கட்ட, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை அடிக்கல் நாட்டினார். மெக்கா நகருக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர், தனது பயணத்திற்கு ஒருநாள் முன்பாக, இங்கு கட்டணமின்றி தங்கிக் கொள்ளலாம்.
ஒரு ஏக்கர் பரப்பளவில் ஐந்து தளங்கள், 400 அறைகளுடன் அமைய உள்ள ஹஜ் இல்லத்தில் தினசரி, 400 பயணியர் தங்க முடியும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் கட்டுமான பணி நிறைவுற்று, ஹஜ் இல்லம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நாசர், அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

