ரவீந்திரா அபாரம்... வலுவான நிலையில் நியூசிலாந்து; தாக்குப் பிடிக்குமா இந்திய அணி?
ரவீந்திரா அபாரம்... வலுவான நிலையில் நியூசிலாந்து; தாக்குப் பிடிக்குமா இந்திய அணி?
ADDED : அக் 18, 2024 01:45 PM

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வம்சாவளி ரச்சின் ரவீந்திராவின் அபார ஆட்டத்தால், வலுவான நிலையை நியூசிலாந்து எட்டியுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் கடந்த 16ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், 2வது நாளில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.
ஆனால், நியூசிலாந்து பவுலர்களின் அபார பந்துவீச்சினால் இந்திய பேட்ஸ்மென்கள் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், 46 ரன்னுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே 91 ரன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், அந்த அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கிய பிறகும், ரவீந்திரா, சவுதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவுதி 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய ரச்சின் ரவீந்திரா சதம் அடித்தார். 134 ரன்னில் ரவீந்திரா அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 402 ரன்களை குவித்தது. இதன்மூலம், 348 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் குல்தீப், ஜடேஜா தலா 3 விக்கெட்டையும், சிராஜ் 2 விக்கெட்டையும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியை சமன் செய்ய வேண்டும் எனில் இந்தியா அணி இமாலய ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். மாறாக, முதல் இன்னிங்சை போலவே 2வது இன்னிங்சிலும் சொதப்பினால், ஆட்டம் நியூசிலாந்துக்கு சாதகமாகி விடும்.