விராட் கோலி ஹோட்டலுக்கு பெங்., மாநகராட்சி நோட்டீஸ்
விராட் கோலி ஹோட்டலுக்கு பெங்., மாநகராட்சி நோட்டீஸ்
ADDED : டிச 22, 2024 12:14 AM

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கு சொந்தமான 'பார் அண்ட் ரெஸ்டாரன்ட்' பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே உள்ளது. அந்த பார் அண்ட் ரெஸ்டாரன்ட் நிர்வாகம், தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கவில்லை.
அங்கு தீ விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என, பெங்களூரு மாநகராட்சியிடம் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர் கடந்த மாதம், புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், பார் அண்ட் ரெஸ்டாரன்ட் நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நிர்வாகம் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால், மாநகராட்சி தற்போது இரண்டாவது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீசில், 'கடந்த முறை நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு நீங்கள் விளக்கம் கொடுக்கவில்லை. நாங்கள் நோட்டீஸ் அனுப்பிய பின், பார் அண்ட் ரெஸ்டாரன்டில் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்களா என்பது குறித்து, ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.
விதிகளை மீறி நள்ளிரவை தாண்டி அதிகாலை 1:00 மணிக்கு திறந்து வைத்திருந்ததாக கடந்த ஆண்டு, இதே பார் அண்ட் ரெஸ்டாரன்ட் நிர்வாகத்திற்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.