ADDED : டிச 17, 2024 11:52 PM

பெங்களூரு; 'பெங்களூரில் இன்றும், நாளையும் கடும் குளிர் நிலவும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வட மாநிலங்களில் குளிர் காலம் துவங்கிவிட்டது. வழக்கத்தை விட இந்த ஆண்டு குளிரின் கடுமை அதிகமாக உள்ளது. சில தினங்களாக பெங்களூரில் மழை பெய்யவில்லை. தற்போது, கர்நாடகா முழுதும் கடும் பனி பொழிவு துவங்கிவிட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பீதர், விஜயபுரா, கலபுரகி மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட ஆறு முதல் ஏழு டிகிரி செல்ஷியஸும்; யாத்கிர், ராய்ச்சூர், பாகல்கோட் மாவட்டங்களில் இயல்பை விட நான்கு முதல் ஐந்து டிகிரி செல்ஷியஸும் குறையும்.
பெங்களூரில் அடுத்த இரண்டு நாட்களில் வெப்பநிலை, இரண்டில் இருந்து மூன்று டிகிரி செல்ஷியஸ் குறையும்.
இருப்பினும், வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை மழை பெய்யும். மழைக்கு பின்னர், குளிர் குறையும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, குளிரில் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதனால், ஸ்வெட்டர் விற்பனை படுஜோராக நடக்கிறது.
டாக்டர்கள் கூறுகையில், 'கடும் குளிரில் முதியோர் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். குழந்தைகளை இரவு நேரங்களில் பெற்றோர் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்' என அறிவுறுத்தி உள்ளனர்.