தெரு நாய்களுக்கு உணவு திட்டம் பெங்களூரு மாநகராட்சி துவக்கம்
தெரு நாய்களுக்கு உணவு திட்டம் பெங்களூரு மாநகராட்சி துவக்கம்
ADDED : அக் 18, 2024 07:44 AM

பெங்களூரு: ''பெங்களூரில், தெரு நாய்களுக்கு உணவளிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது, இது வெற்றி பெற்றால், அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்படும்,'' என மாநகராட்சி கால்நடை பிரிவு சிறப்பு கமிஷனர் சுரல்கர் விகாஸ் கிஷோர் தெரிவித்தார்.
பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகத்தின், ராஜ்குமார் கண்ணாடி மாளிகை அருகில், நேற்று நடந்த நாய்கள் திருவிழாவை, கால்நடை பிரிவு சிறப்பு கமிஷனர் விகாஸ் கிஷோர் துவக்கி வைத்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:
இந்த திட்டத்தின் கீழ், துப்புரவு தொழிலாளர்கள், சுகாதார அதிகாரிகள், கால்நடை பிரிவு அதிகாரிகள், விலங்கு ஆர்வலர்கள், விலங்கு பராமரிப்பாளர்கள், பொது மக்கள் ஒன்றிணைந்து, ஹோட்டல்கள், உணவகங்களில் இருந்து உணவு சேகரித்து, தெரு நாய்களுக்கு வழங்குவர்.
போர்டு
நாய்களுக்கு உணவு கிடைக்காத பகுதிகளில், தினமும் ஒரு முறை உணவு வழங்குவதே, திட்டத்தின் நோக்கமாகும். மாநகராட்சியின் எட்டு மண்டலங்களில் குறிப்பிட்ட இடங்களில் தினமும் தெரு நாய்களுக்கு வழங்கப்படும் என்ற போர்டு வழங்கப்படும்.
சோதனை முறையில், ஒரு மாதம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பொது மக்களின் ஆதரவு கிடைத்தால், திட்டம் நீடிக்கப்படும்.
அந்தந்த பகுதிகளில் மக்களின் கருத்து கேட்டறிந்து முடிவு செய்வோம். ஏதாவது குறைகள் இருந்தால், சரி செய்து கொள்வோம். ஹோட்டல்கள், ரெஸ்டாரென்டுகளில் மிச்சமாகும் உணவை தெரு நாய்களுக்கு வழங்குவது குறித்து, உரிமையாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கு அவர்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. கெடாத உணவை தரும்படி கூறியுள்ளோம்.
பெங்களூரில் 2.70 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன.
இவைகள் மனிதர்களை கடிக்கின்றன. கால்நடை மருத்துவர்கள், நிபுணர்கள், விலங்கு ஆர்வலர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. தெரு நாய்கள் உணவு கிடைக்காத கோபத்தில், மக்களை கடிப்பதாக கூறினர். எனவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கிண்ணங்கள்
நாய்களுக்கு உணவு வழங்க, எட்டு மண்டலங்களில் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் நாய்களுக்கு உணவு வழங்கப்படும் என, போர்டு வைக்கப்படும்; கிண்ணங்கள் வைக்கப்படும். மாதம் ஒரு முறை இந்த இடங்கள் ஆய்வு செய்யப்படும். ஏதாவது பிரச்னைகள் இருந்தால், சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிழக்கு மண்டலம்: எம்.சி.சி தலைமையகம், என்.ஆர் சதுக்கம், ஹட்சன் சதுக்கம்
மஹாதேவபுரா மண்டலம்: சதாமங்கள சாலையில் உள்ள கிராம தேவதை கோவில், ஹூடி
பொம்மனஹள்ளி மண்டலம்: குப்பலாலா மெயின் ரோடு, கோனனகுண்டே, சுப்ரமணியபுரா, வசந்தபுராவின் பல்வேறு இடங்கள்
ஆர்.ஆர்.நகர் மண்டலம்: பி.சி.எம்.சி., லே - அவுட், ஆர்.ஆர். நகர்
தாசரஹள்ளி மண்டலம்: பாகல்குன்டே, மஞ்சுநாதா நகர் மெயின் ரோடு
தெற்கு மண்டலம்: சித்தாபுரா வார்டு, குட்டேபாளையா
எலஹங்கா மண்டலம்: டெலிகாம் லே அவுட், ஜக்கூர்
மேற்கு மண்டலம்: காயத்ரி நகரில் பல இடங்கள்.