பெங்களூரு 'நமது கிளினிக்'கில் விரைவில் நவீன இயந்திரங்கள்
பெங்களூரு 'நமது கிளினிக்'கில் விரைவில் நவீன இயந்திரங்கள்
ADDED : அக் 19, 2024 11:16 PM

பெங்களூரு: ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும், 'நமது கிளினிக்'குகளில் நோயாளிகளின் வசதிக்காக ஏ.டி.எம்., போன்ற இயந்திரங்கள் வரவுள்ளன.
பெங்களூரு மாநகராட்சியின், சுகாதார பிரிவு வெளியிட்ட அறிக்கை:
தினக்கூலி தொழிலாளர்கள், குடிசைப்பகுதி மக்கள் உட்பட ஏழைகளுக்கு எளிதில் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், பெங்களூரில் மாநில அரசு சார்பில், நமது கிளினிக்குகள் திறக்கப்பட்டன. இவைகள் மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன.
நமது கிளினிக்குகளில், 12 விதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிளினிக்கிலும், மருத்துவ அதிகாரி, நர்ஸ், லேப் டெக்னீஷியன், டி குருப் ஊழியர் பணியாற்றுகின்றனர். இந்த கிளினிக்குகளை தரம் உயர்த்த, மாநில சுகாதாரத் துறையும், மாநகராட்சியும் முடிவு செய்துள்ளன.
பெங்களூரில் உள்ள அனைத்து நமது கிளினிக்குகளிலும், விரைவில் ஏ.டி.எம்., போன்ற இயந்திரங்கள் பொருத்தப்படும். இந்த இயந்திரங்கள் நோய்களை கண்டுபிடிக்க உதவும்.
இவற்றில் ரத்த அழுத்தம், இ.சி.ஜி., பரிசோதனை வசதிகள் இருக்கும். டெங்கு, டைபாய்டு, மலேரியா, ஹெச்.ஐ.வி.,யை பரிசோதிக்கும் கிட், எடை மற்றும் உயரத்தை அளவிடும் கருவிகள் அடங்கியிருக்கும். இதில் 'டச் ஸ்க்ரீன்' வசதி இருக்கும்.
இந்த இயந்திரங்களுக்கு, ஆன்லைன் பிளாட்பாரத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்படும். எனவே பரிசோதனை செய்து கொண்ட நோயாளிகள் பற்றிய தகவல்களை டாக்டர்கள் தெரிந்து கொள்ளலாம். இது சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
நமது கிளினிக்குகளில், சுகாதார ஏ.டி.எம்.,கள் பொருத்த, மாநகராட்சி டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.