பெங்களூரு பீன்யா மேம்பாலம் திறப்பு இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி
பெங்களூரு பீன்யா மேம்பாலம் திறப்பு இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி
ADDED : ஜன 20, 2024 05:58 AM

பெங்களூரு : ஆய்வுப் பணிக்காக மூடப்பட்ட பீன்யா மேம்பாலத்தில், நேற்று காலை முதல் இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில், டாக்டர் சிவகுமார சுவாமிகள் மேம்பாலம் என்று அழைக்கப்படும் பீன்யா மேம்பாலமானது, கோரகுண்டே பாளையாவில் இருந்து நாகசந்திரா வரை 4.5 கி.மீ., நீளமுள்ளது. பெங்களூருடன் 18 மாவட்டங்களை இணைக்கும் துமகூரு சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், கனரக லாரிகள் சென்று வருகின்றன.
இந்த மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய, 2023ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 38.5 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணியை மேற்கொண்டது.
இதை ஆய்வு செய்ய, கடந்த 16ம் தேதி நள்ளிரவு முதல் நேற்று காலை 11:00 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை முதல் இலகுரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆய்வு அறிக்கை கிடைத்த பின், கனரக வாகனங்கள் மேம்பாலத்தில் அனுமதிப்பது குறித்து முடிவு செய்யபட உள்ளது.
'அதுவரை நெலமங்களாவில் இருந்து கோரகுண்டேபாளையா வழியாக தாசரஹள்ளி, ஜாலஹள்ளி கிராஸ், பீன்யா போலீஸ் நிலையம் ஜங்ஷன், எஸ்.ஆர்.எஸ்., ஜங்ஷனுக்கு செல்ல வேண்டும்' என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.