!'குடி'மகன்களுக்கு பெங்களூரு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை: புத்தாண்டில் போதையில் வாகனம் ஓட்டினால் கைது
!'குடி'மகன்களுக்கு பெங்களூரு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை: புத்தாண்டில் போதையில் வாகனம் ஓட்டினால் கைது
ADDED : டிச 29, 2024 06:45 AM

பெங்களூரு:'புத்தாண்டை முன்னிட்டு, விடிய விடிய பார்ட்டி நடத்தி, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது; குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் கைது செய்யப்படுவர்' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா எச்சரித்துள்ளார்.
ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தில், 'குடி'மகன்களை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருக்கும். பெங்களூரின் எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை, சர்ச் ஸ்ட்ரீட், கோரமங்களா உட்பட பல்வேறு இடங்களில் பப்கள், நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள் என, பல இடங்களில் விடிய, விடிய புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும்.
பார்ட்டிகளில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கூட மது அருந்துவர். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டி வருவர். குடிபோதையில் வாகனம் ஓட்டி வருவோரை கண்காணிக்கும் போலீசாருடன் தகராறு செய்வர். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. குடி போதையில் வாகனம் ஓட்டி, விபத்துகளுக்கும் காரணமாகின்றனர்.
நாளை மறுதினம் நள்ளிரவு புத்தாண்டு பிறக்கிறது. இதற்காக, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா எச்சரித்துள்ளார்.
இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், மதுபானம் அருந்தி, போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்ட கூடாது. ஒருவேளை வாகனங்கள் ஓட்டினால், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டுபிடிக்க, பெங்களூரின் பல்வேறு இடங்களில், 'செக் பாயின்ட்'கள் அமைக்கப்படும். எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு, போதைப் பொருள் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்கின்றனர். ஏற்கனவே பல இடங்களில் சோதனை நடத்தி, மூன்று வெளிநாட்டு பிரஜைகள் உட்பட, 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2.50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடிபோதையில் மேம்பாலத்தின் மீது நடமாடி, அசம்பாவிதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் மேம்பாலங்கள் உட்பட, அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, நகரின் பல இடங்களில் மக்கள் சேர்வர். குறிப்பாக எம்.ஜி., சாலை, பிரிகேட் சாலை, கோரமங்களா, இந்திரா நகர், 100 அடி சாலை போன்ற இடங்களில் பெருமளவில் மக்கள் வாகனங்களில் வருவர். இதனால் போக்குவரத்து போலீசார், சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
பிரிகேட் சாலையில், டிசம்பர் 31ம் தேதி இரவு 8:00 மணி முதல், ஜனவரி 1ல் அதிகாலை 2:00 மணி வரை, போலீஸ் வாகனங்கள், அவசர சேவைகள் வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ல் மாலை 4:00 மணி முதல், மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை, எம்.ஜி.சாலை, அனில்கும்ப்ளே சாலை, டிரினிட்டி சதுக்கம், பிரிகேட் சாலை, சர்ச் ஸ்ட்ரீட், ரெஸ்ட் ஹவுஸ் சாலை, மியூசியம் சாலை, எம்.ஜி.சாலை ஜங்ஷன் முதல், பழைய மெட்ராஸ் சாலை வரை, வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவாஜி நகர், பி.எம்.டி.சி., ஷாப்பிங் காம்ப்ளக்சின் முதல் மாடி, யு.பி.சிட்டி, கருடா மால், கப்பன் பூங்காவில் வாகனங்கள் நிறுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி., சாலை ஜங்ஷனில் இருந்து, அபேரா ஜங்ஷனுக்கு நடந்து செல்ல மட்டுமே அனுமதி உள்ளது.
டிசம்பர் 31ம் தேதி, மாலை 4:00 மணிக்குள், இந்த சாலைகளில் வாகனங்கள் நிறுத்தி இருந்தால், அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.