சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் பெங்களூரு போலீசாருக்கு பின்னடைவு
சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் பெங்களூரு போலீசாருக்கு பின்னடைவு
ADDED : ஜன 08, 2024 06:53 AM
பெங்களூரு: சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில், பெங்களூரு போலீசார் பின் தங்கியுள்ளனர்.
உலகின் பிரபலமான ஐ.டி., நிறுவனங்கள் பெங்களூரில் உள்ளன. ஐ.டி., துறையில் உலகின் பல முக்கிய நகரங்களுடன் போட்டி போடுகிறது. இத்தகைய நகரில், சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில், போலீசார் பின் தங்கியுள்ளனர்.
பெங்களூரில் சைபர் குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் 17,623 சைபர் குற்றங்கள் பதிவாகின. இவற்றில் 1,271 வழக்குகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விஷயத்தில் பெங்களூரு போலீசார் பின் தங்கியுள்ளனர்.
இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சைபர் குற்றங்களில் தொடர்பு கொள்பவர்கள், வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் அறிமுகம் இருப்பதில்லை. ஆன்லைன் வழியாகவே பண பரிமாற்றம் உட்பட, அனைத்தும் நடக்கின்றன.
மோசடியின் சூத்திரதாரிகள் அதிநவீன தொழில் நுட்பத்தில் செயல்படுகின்றனர். தொழில் நுட்பங்களே இவர்களை காப்பாற்றுகிறது.
போலீஸ் துறை சைபர் குற்றங்களை விசாரிக்கும் போது, அதிக விழிப்புடன் செயல்படுவதே, குற்றங்களை கட்டுப்படுத்த ஒரே தீர்வாகும். பொது மக்கள் அனைத்து ஆன்லைன் செயல்பாடுகளை நன்கு ஆராய வேண்டும். மொபைல் போன் செயலிகளை நம்பி, தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள கூடாது.
டிஜிட்டல் உலகம் அதிவேகமாக வளர்வதால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை காப்பாற்ற விழிப்புடன் இருப்பது முக்கியம். ஏனென்றால் ஒரே ஒரு கிளிக் செய்தால், பெரும் நஷ்டத்துக்கு காரணமாகும். ஆன்லைனில் செயல்படும் போது, மக்கள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது:
சைபர் குற்ற வழக்குகளை விரைந்து கண்டுப்பிடிக்க, நாங்கள் சட்டம் - ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் சைபர் குற்ற புகார்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளோம். பல்வேறு வங்கிகளின் நோடல் அதிகாரிகளுடன், நாங்கள் தொடர்ந்து கூட்டம் நடத்துகிறோம்.
இழந்த பணத்தை திரும்ப பெற, புகார்தாரர்களுக்கு உதவுகிறோம். சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தேவையான டிஜிட்டல் உபகரணங்கள் பொருத்தியுள்ளோம். குற்றவாளிகளை பிடிக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம்.
ஆன்லைன் வேலை வாய்ப்பு தருவதாக மோசடி, கிரிப்டோ கரன்சி முதலீடுகள், ஆபாச வீடியோ பதிவு செய்து, பாலியல் தொல்லை கொடுப்பது உட்பட, பல வழிகளில் இந்த மோசடிகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.