7வது வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு; 163 ரன்கள் இலக்காக நிர்ணயம்
7வது வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு; 163 ரன்கள் இலக்காக நிர்ணயம்
UPDATED : ஏப் 27, 2025 09:38 PM
ADDED : ஏப் 27, 2025 07:39 PM

புதுடில்லி: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டில்லி அணியும், 3வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன. டில்லி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய டில்லி அணிக்கு அபிஷேக் போரல் (28), டூபிளசிஸ் (22) சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருப்பினும், அந்த அணிக்கு எதிர்பார்த்த ஸ்கோர் கிடைக்கவில்லை. கருண் நாயர் (4), அக்ஷர் படேல் (15) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.
மறுமுனையில் நிதானமாக ஆடி ரன்களை குவித்த கே.எல்., ராகுல், 41 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, ஸ்டப்ஸ் தனது பங்கிற்கும் அதிரடியை காட்டினார் 18 பந்துகளில் 34 ரன்கள் குவித்து புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் டில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
163 ரன்கள் என்ற இலக்கை அடைந்து பெங்களூரு அணி, 7வது வெற்றியை பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.