பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
ADDED : அக் 15, 2025 10:32 PM

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் செக்போஸ்ட், யூனியன் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது . இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஓசூர் ஆர்.டி.ஓ., செக்போஸ்டில் ரூ.1.48 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, மாநில எல்லை ஜூஜூவாடியில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கான ஆர்.டி.ஓ., செக்போஸ்ட் உள்ளது. இங்கு வரும் வாகனங்களுக்கு கட்டணத்துடன் உள் அனுமதி சீட்டு வழங்கப்படும். அங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்த புகார் படி, மாலை, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் எஸ்.ஐ., விஜயகுமார் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இரவு, 7:30 மணி வரை நீடித்த இச்சோதனையில், கணக்கில் வராத, 1.48 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
யூனியன் அலுவலகத்தில் 4 மணி நேரம்
சோதனை: ரூ. 1.31 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 4:00 மணிக்கு சோதனைக்காக வந்தனர். அப்போது, யூனியன் அலுவலகத்தில் நின்ற காண்ட்ராக்டர் ஒருவரின் காரை சோதனை செய்தனர். மேலும், காண்டராக்டரை விசாரணை நடத்திய போது, அவரிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் இருந்தன. தொடர்ந்து, யூனியன் அலுவலகத்தின் உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஒவ்வொரு அலுவலர்களிடம் விசாரணை நடத்தி, பணம் எதுவும் லஞ்சமாக பெற்றுள்ளனரா என சோதனை செய்தனர். இருப்பினும், அலுவலர்கள் தரப்பில் இருந்து, 31 ஆயிரம் ரூபாய் என 1.31 லட்சம் ரூபாயை கைப்பற்றி, நான்கு மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி சென்றனர். மேலும், காண்டராக்டரிடம் இருந்த பணம் ஒரு லட்சம் மற்றும் அலுவலர்களிடம் பணம் குறித்து, விளக்கம் கடிதம் பெறப்பட்டுள்ளதாகவும், அலுவலகத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பண்ருட்டி வட்டார போக்குவரத்து
அலுவலகத்தில் ரெய்டு
கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டார போககுவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள், மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சம்பந்தமில்லாத புரோக்கர்கள், வெளிநபர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், அன்பழகன் குழுவினர்கள் மாவட்ட ஆய்வுகுழு அலுவலக ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4:00 மணியளவில் பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 88 ஆயிரத்து 100 ரூபாய் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள் , அலுவலக சம்பந்தமில்லாத புரோக்கர்கள், அலுவலக ஊழியர்களிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூனியன் அலுவலகத்தில் திடீர் ரெய்டு
தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பரிசுப் பொருட்கள், அன்பளிப்புகள் பெறப்படுகிறதா? என லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். துாத்துக்குடி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., பீட்டல் பால்துரை தலைமையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் நேற்று திடீரென சோதனை நடத்தப்பட்டது.
யூனியன் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைகள் மற்றும் இன்ஜினீயர் பிரிவு அதிகாரிகளிடம் அவர்கள் சோதனை நடத்தினர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் அலுவலகத்தில் இருந்து எதுவும் சிக்கவில்லை. மேலும், அலுவலக வளாகத்தில் நின்ற நபரிடம் இருந்து 29000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனால், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஏமாற்றமடைந்தனர்.
கணக்கில் வராத ரூ. 55 ஆயிரம் சிக்கியது
நாகை மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தில், தீபாவளி பண்டிகை வசூல் நடப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத் துறையினர், பத்திரப் பதிவு அலுவலகத்தில், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆவண காப்பறையில் மறைத்து வைக்கப்பட்டது மற்றும் புரோக்கர் பிரகாஷிடம் இருந்து 55 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாவட்ட இணை பதிவாளர் கவியரசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.71 ஆயிரம் பறிமுதல்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. பால் சுதர் தலைமையில் நடந்த சோதனையில், சார்பதிவாளர் ஷர்மிளா அலுவலகத்தில் இருந்து ரூ.71 ஆயிரம் கண்டெடுக்கப்பட்டது. கணக்கில் வராத அந்த தொகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேல்விசாரணை நடந்தத
மன்னார்குடி நகராட்சியில்ரூ.1.22 லட்சம் பறிமுதல்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சியில், நேற்று மாலை, 4:00 மணிமுதல், டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். மேலாளர் உட்பட, 10 ஊழியர்களிடம், நான்கு மணி நேரம் நடத்திய சோதனையில் , கணக்கில் வராத,1.22 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புரோக்கர்களிடம் ரூ.33,600 பறிமுதல்
பெரம்பலுார் மாவட்டம், செட்டிக்குளம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், ஆவணப்பதிவுக்கு லஞ்சம் வாங்குவதாக, பெரம்பலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான போலீசார், செட்டிக்குளம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த புரோக்கர்களிடமிருந்து 33 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைபற்றினர்.இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ரூ.1.80 லட்சம் பறிமுதல்
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்டம், வாழப்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், சேலம் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் முருகன், நரேந்திரன் தலைமையில் போலீசார், மாலை, 4:00 மணிக்கு சோதனையை தொடங்கினர். இரவு, 7:40 மணி வரை சோதனை நடந்தது.
அதில் வாழப்பாடி சார் - பதிவாளரான, வலசையூரை சேர்ந்த நளினா(பொ), 53, அறையில், கணக்கில் வராத, 1.80 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நளினாவிடம், தொடர்ந்து விசாரித்ததில், அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2024 முதல், நளினா, பொறுப்பு சார் பதிவாளராக பணியில் உள்ளார்.