ADDED : நவ 17, 2024 11:06 PM

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டையில் இருந்து வந்த பழைய, 'சானிடரி போர்டு' அலுவலகத்தில், தங்கவயல் பெஸ்காம் அலுவலகம் இயங்க உள்ளது.
தங்கவயலில் சுகாதார பணிகள் மேற்கொள்ள, 1923ல் சானிடரி போர்டு அலுவலகம், சாம்பியன் ரீப் பகுதியில் அமைக்கப்பட்டது. 1958ல் ராபர்ட்சன்பேட்டை ஹெல்த் ஆபீஸ் சாலையில், புதிய கட்டடத்திற்கு சானிடரி போர்டு அலுவலகம் மாற்றப்பட்டது. அப்போது 26 உறுப்பினர்கள் இருந்தனர்.
இந்த அலுவலகத்தில், ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை, உரிகம்பேட்டை, மஸ்கம், கிருஷ்ணகிரி லைன், பண்டார் லைன், ராஜர்ஸ் கேம்ப் ஆகியவைகளை உள்ளடக்கி நகர நிர்வாகம், சுகாதாரம், கடைகள் நடத்த அனுமதி, வரி வசூல், பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 1964ல் தரம் உயர்த்தி, டவுன் சபையாக ஆனது. இதற்காக ராபர்ட்சன்பேட்டை பி.எம்.சாலையில், புதிய கட்டடத்தில் டவுன் சபை இயங்கியது.
காலியாக இருந்த சானிடரி போர்டு கட்டடத்தில், பங்கார்பேட்டையில் இருந்த வருவாய்த் துறை அலுவலகம், தங்கவயலுக்கானது என மாற்றினர். இந்த அலுவலகம், 2022ல் மினி விதான் சவுதா அலுவலகத்தில் இயங்க துவங்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பழைய சானிடரி போர்டு கட்டடம் காலியாக கிடந்தது. இதை ஆக்கிரமிக்க சிலர் திட்டமிட்டனர். சட்டவிரோத செயலும் நடப்பதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
இந்நிலையில், இக்கட்டடத்தை பெஸ்காம் அலுவலகமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இக்கட்டடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, பெஸ்காம் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கிவருகிறது.