லஞ்ச ஊழியர்களுக்கு ரூ.33 கோடி பிழைப்பூதியம்; மக்கள் பணம் வீண்!
லஞ்ச ஊழியர்களுக்கு ரூ.33 கோடி பிழைப்பூதியம்; மக்கள் பணம் வீண்!
UPDATED : நவ 06, 2025 06:19 AM
ADDED : நவ 06, 2025 12:14 AM

சென்னை: ''கடந்த மூன்று ஆண்டுகளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட 1,200 அரசு ஊழியர்களுக்கு, 33 கோடி ரூபாய் பிழைப்பூதியம் வழங்கி, பொதுமக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது,'' என, சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அரசு துறையில் லஞ்சம் பெற்றதால், தற்காலிக மற்றும் நிரந்த பணி நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தகவல்கள் பெறப்பட்டன. தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவோர் மீதான குற்றச்சாட்டு மீது, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர் நிரந்த பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்படும்போது, அவருக்கு பிழைப்பூதியமாக, அவர் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஆறு மாதம் வழங்கப்படும். விசாரணை ஆறு மாதங்களுக்கு மேல் சென்றால், பிழைப்பூதியம் 75 சதவீதம் வழங்கப் பட வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 2019 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகளில், ஊரக வளர்ச்சித் துறை உட்பட ஐந்து துறைகளில் மட்டும், லஞ்சம் பெற்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட 1,200 ஊழியர்களுக்கு, 33 கோடி ரூபாய் பிழைப்பூதியமாக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்தில் அதிகபட்சமாக 17.67 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளையும் கணக்கிட்டால், மாதம் 200 கோடி ரூபாய் வரை ஊழியர்களுக்கு பிழைப்பூதியமாக வழங்கப்படுகிறது. அதாவது, எந்த வேலையும் செய்யாமல், நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், கடந்த 20 ஆண்டுகளாக ஊதியம் பெற்று வருகின்றனர்.
இவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க, அதிகாரிகள் முன்வருவதில்லை. அவர்களை காப்பாற்றும் நோக்கில், பொதுமக்களின் வரி பணத்தை வீணடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

