அமெரிக்கா விமானத்தால் பஞ்சாப்பிற்கு அவப்பெயர்: பக்வந்த் மன் கோபம்
அமெரிக்கா விமானத்தால் பஞ்சாப்பிற்கு அவப்பெயர்: பக்வந்த் மன் கோபம்
ADDED : பிப் 14, 2025 10:27 PM

சண்டிகர்: அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ள அம்மாநில முதல்வர் பக்வந்த் மன், மாநிலத்தை அவமானப்படுத்த முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த இந்தியர்களில் 104 பேர் முதற்கட்டமாக அந்நாடு இந்தியாவுக்கு நாடு கடத்தியது. கடந்த 5ம் தேதி அவர்கள் வந்த விமானம் பஞ்சாபின் அமர்தசரசில் தரையிறங்கியது. 2வது விமானமும் பஞ்சாபில் நாளை தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களுடன் வரும் விமானம் நாளை அமிர்தசரசில் தரையிறங்குகிறது. இந்த விமானத்தை அமிர்தசரசில் தரையிறக்குவதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் கூற வேண்டும். பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் சந்திக்கும்போது, இந்தியர்கள் கையில் விலங்கை அந்நாட்டு அதிகாரிகள் போட்டிருக்க வேண்டுமா?இதுதான் டிரம்ப் தரும் பரிசா?
கடந்த 5ம் தேதி வந்த முதல் விமானத்தில் வந்தவர்கள் பெரும்பாலானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அந்த விமானத்தை ஆமதாபாத்திற்கு அனுப்பி வைக்காமல், அமிர்தசரசில் தரையிறக்கியது ஏன்?பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அமிர்தசரஸ் நகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

