அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவிப்பு
அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவிப்பு
ADDED : பிப் 04, 2024 04:30 AM

புதுடில்லி: பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று மோடி குறிப்பிட்டார்.
ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக அத்வானிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கைகள் ஏராளம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பாரதிய ஜனதாவின் முன்னெடுப்பில் அத்வானியின் பங்கு முதன்மையானது. கடந்த 1990ல் அவர் மேற்கொண்ட ராமர் ரத யாத்திரையே, ராமர் கோவில் இயக்கம் வலுப்பெற முக்கிய காரணமாக அமைந்தது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட சீனியர் தலைவர்களுடன் இணைந்து, பா.ஜ.,வை உருவாக்கியதிலும் அத்வானியின் பங்கு குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் கட்சியை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம். கட்சியின் நீண்ட கால தலைவர் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது.
உடல்நிலை மற்றும் மூப்பு (96 வயது) காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார்.
சமீபத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது, அதில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக, சமூக வலைதளத்தில் மோடி அறிவித்தார். அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியானது.
பங்களிப்பு அளப்பரியது
பிரதமர் மோடி கூறியதாவது:
நம்முடைய காலத்தில் நாம் பார்த்து பிரமித்த மிகப் பெரும் அரசியல் மேதைகளில் ஒருவர் அத்வானி. நாட்டின் வளர்ச்சிக்கான அவருடைய பங்களிப்புகள் அபாரமானவை. சாதாரண அடித்தள பின்னணியில் இருந்து, நாட்டின் துணை பிரதமராக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
நீண்டகால அரசியல் வாழ்க்கையில், தன்னலமில்லா உறுதியுடன், மிகவும் வெளிப்படையாகவும், ஒருங்கிணைந்தும், அரசியலின் தரத்தை நிர்ணயித்து, அரசியல் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தியவர்.
நாட்டின் கலாசார மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அவருடைய பங்களிப்பு ஒப்பிட முடியாதவை. இந்த தருணம் எனக்கு தனிப்பட்ட முறையில் உணர்ச்சிகரமானது. அவருடன் இணைந்து, அவருடன் பேசி, அவரிடம் இருந்து கற்கும் பெரும் பாக்கியத்தை பெற்றவன் நான்.
இவ்வாறு மோடி கூறினார்.
அத்வானியுடன் போனில் பேசி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஒடிசாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியிலும் அத்வானியின் பெருமைகள் குறித்து சிலாகித்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. 'இப்போதாவது அத்வானிக்கு மரியாதை கொடுக்க மனம் வந்ததே' என குத்தியும் காட்டியது காங்கிரஸ்.