பாரத் ரத்னாவுக்கான பிரிவில் விளையாட்டுத் துறை : காங்கிரஸ் கட்சி ஆதரவு
பாரத் ரத்னாவுக்கான பிரிவில் விளையாட்டுத் துறை : காங்கிரஸ் கட்சி ஆதரவு
ADDED : ஜூலை 24, 2011 12:41 AM

புதுடில்லி : 'பாரத் ரத்னா விருதுக்கான பரிந்துரைப் பிரிவுகளில், விளையாட்டுத் துறையையும் சேர்த்துக் கொள்வது, என்ற மத்திய அரசின் திட்டம் சரியானதே' என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, நாட்டின் உயரிய கவுரவமான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்புகளில் இருந்தும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து, பாரத் ரத்னா விருதுக்கான பரிந்துரைப் பிரிவுகளில், விளையாட்டுத் துறையையும் சேர்த்துக் கொள்ள, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன், உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சிதம்பரம், பிரதமர் பார்வைக்கு அதை அனுப்பி வைத்துள்ளார்.
காங்., செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, இதுகுறித்து கூறியதாவது: இந்தியாவில், சில விலை மதிப்பிட முடியாத மனிதர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த விருதும் தேவையில்லை. அப்படிப்பட்ட நபர்தான் சச்சின் டெண்டுல்கர். பாரத் ரத்னா விருதுக்கான பரிந்துரைப் பிரிவுகளில், விளையாட்டுத் துறையையும் சேர்த்துக்கொள்ளும் மத்திய அரசின் திட்டம், மிக முக்கியமான ஒன்று. இது ஏதோ தனிப்பட்ட நபரின் விருப்பம் அல்ல, ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையின் விருப்பம்.
இதுதொடர்பாக, விளையாட்டுத் துறை அமைச்சர் சார்பில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மீது முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. இது ஒரு கொள்கை ரீதியான நடவடிக்கை என்பதால், அனைவரும் பொறுமை காப்பது அவசியம். இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.