பாரதிதாசன் பிறந்த நாள் விழா தமிழ் சங்கத்தில் கோலாகலம்
பாரதிதாசன் பிறந்த நாள் விழா தமிழ் சங்கத்தில் கோலாகலம்
ADDED : ஏப் 30, 2025 06:43 PM

புதுடில்லி:பாவேந்தர் பாரதிதாசன் 134வது பிறந்த நாள் டில்லி தமிழ்ச் சங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் அரங்கில் 'பாவேந்தர் பாரதிதாசன்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் அறவேந்தன் துவக்கி வைத்தார்.
'பாவேந்தர் தந்த காப்பியங்கள்' என்ற தலைப்பில் சோழராசா முடிமன்னன், 'புதுமைக் கவிஞரின் புரட்சிப் பொறிகள்' என்ற தலைப்பில் சேதுராமலிங்கம், 'பாரதிதாசனும் பாரதியும்' என்ற தலைப்பில் சிவபாலமுருகன், 'குடும்ப விளக்கேற்றிய பெருங்கவிஞர்' என்ற தலைப்பில் மாலதி தமிழ்ச்செல்வன், 'பாரதிதாசனும் வள்ளுவரும்' என்ற தலைப்பில் ராஜ்குமார் பாலா மற்றும் 'பாரதிதாசனும் தமிழ் உணர்வும்' என்ற தலைப்பில் வீர வியட்நாம் ஆகியோர் பேசினர்.
தி.மு.க., துணைப் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான திருச்சி சிவா, டில்லித் தமிழ்ச் சங்கப் புனரமைப்பு பணிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கி பேசியதாவது:
பல்வேறு தலைப்புகளில் நடந்த பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றிய கருத்தரங்கம் ஓர் ஆய்வுக் கட்டுரையாக அமைய வாய்ப்புள்ளது. நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்குப் பின், பாரதியாரின் ஒரு நாட்டுப்புற பாடலை பாரதிதாசன் பாடினார். பாரதியாரும் அந்த விருந்துக்கு வந்திருந்தார். ஆனால், பாரதிதாசனுக்கு அது தெரியாது. அந்தப் பாடல்தான், பாரதியாருக்கு பாரதிதாசனை அறிமுகம் செய்து வைத்தது. பாரதியின் மேல் தீவிர அன்பு கொண்டதால் கனகசுப்புரத்தினம் என்ற தனது பெயரையே பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். அவரது கவிதைகளில் நெருப்புப் பொறிகள் பறக்கும். மிகுந்த தமிழுணர்வு கொண்டவர்.
பல்வேறு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாட்டை ஆண்டிருந்தாலும் ஒரு சிலரே சரித்திரத்தில் நிற்கின்றனர் அதைப்போலவே, பாரதிதாசன் பெண்களுக்கென 'குடும்ப விளக்கு' படைத்தார். அந்தக் காலத்தில் பெண்கள் அடிமைத்தனமாக வாழ்ந்ததை அதில் குறிப்பிட்டுள்ளார். பெண்ணின் உரிமைகள், உடைமைகள் முடக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.
முதியோர் காதல் பற்றியும் கவிதைகள் படைத்துள்ளார். பாரதிதாசன் ஒரு தமிழ்க்காவலர். தமிழ்ச் சங்கத்தில் அவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி. நம் நாட்டில் பல்மொழி கற்று வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்தால், நம் நாடு முதன்மையாக விளங்கும்.
ஆண்டுகள் ஒடலாம். விஞ்ஞானம் வளரலாம். மனிதர்கள் மறைவர். ஆனால், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் போன்றோர் ஏட்டில் என்றும் நிலைத்து நிற்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்ச் சங்க பொதுச் செயலர் முகுந்தன், துணைத் தலைவர் ராகவன், இணைச் செயலர் சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் அமுதா பாலமூர்த்தி, ரங்கநாதன், பெரியசாமி, காத்திருப்பு உறுப்பினர் ராஜா, முன்னாள் பொதுச் செயலர் கண்ணன், முன்னாள் துணைத் தலைவர் நாகஜோதி, முன்னாள் இணைச் செயலர் பாலமூர்த்தி மற்றும் பாதர் ரோசார்யா ஆகியோர் தலைமை விருந்தினரையும், கருத்தரங்க அறிஞர்களையும் கவுரவித்தனர்.
செயற்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.