பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11 இரண்டு கட்டங்களாக தேர்தல்
பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11 இரண்டு கட்டங்களாக தேர்தல்
UPDATED : அக் 06, 2025 11:56 PM
ADDED : அக் 06, 2025 11:46 PM

பீஹார் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 6ல், 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில், நவ., 11ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபையின் பதவிக்காலம், நவ., 22ல் முடிவடைகிறது.
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீஹார் சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
தலைநகர் டில்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறியதாவது:
பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கும். நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும். தொடர்ந்து நவ., 11ல், 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும்.
இவற்றில் பதிவாகும் ஓட்டுகள், நவ., 14ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 90,712 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 'வெப் கேமரா' வசதி செய்யப்பட்டுள்ளது.
வயதான மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ, ஓட்டுச்சாவடி மையங்களில் சாய்வுதளங்கள் நிறுவப்படும். பீஹார் சட்டசபை தேர்தலில் முதன்முறையாக, ஓட்டுச்சாவடிகளில் மொபைல் போன் டிபாசிட் கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளன. மொபைல் போனை இந்த கவுன்டரில் ஒப்படைத்து விட்டு, வாக்காளர் ஓட்டளிக்கலாம்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, 10 நாட்களுக்கு முன் வரை விண்ணப்பிக்கலாம். வேட்புமனு தாக்கல் முடிந்ததும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதுவே தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில், 38 தொகுதிகள் எஸ்.சி., பிரிவினருக்கும், இரண்டு தொகுதிகள் எஸ்.டி., பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின், பீஹாரில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. 22 ஆண்டுகளுக்கு பின், அம்மாநிலத்தில் நடந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, 47 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
தேர்தல் அட்டவணை நிகழ்வுகள் முதற்கட்ட தேர்தல் (121 தொகுதிகள்) 2ம் கட்ட தேர்தல் (122 தொகுதிகள்) தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியீடு 10.10.25 13.10.25 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 17.10.25 20.10.25 வேட்புமனு பரிசீலனை 18.10.25 21.10.25 வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் 20.10.25 23.10.25 ஓட்டுப்பதிவு 6.11.25 11.11.25 ஓட்டு எண்ணிக்கை 14.11.25 மொத்த வாக்காளர்கள் 7.42 கோடி ஆண் வாக்காளர்கள் 3.92 கோடி பெண் வாக்காளர்கள் 3.50 கோடி முதன்முறை வாக்காளர்கள் 14 லட்சம் 85 வயதுக்கு மேற்பட்டோர் 4.04 லட்சம் 100 வயதை கடந்தோர் 14,000 திருநங்கையர் 1,725