ADDED : அக் 06, 2025 10:03 PM

புதுடில்லி: மேற்குவங்கத்தில் சவாலான சூழ்நிலையில் மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜ தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு சேவை செய்த பாஜ எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள் தாக்கப்பட்டனர்.
இதனையடுத்து பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மேற்கு வங்கத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ததற்காக, தற்போதைய எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. உட்பட நமது கட்சி சகாக்கள் தாக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உணர்வின்மையையும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மிகவும் பரிதாபகரமானதாகவும் எடுத்துக்காட்டுகிறது.
இத்தகைய சவாலான சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடுவதை விடுத்து மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். பாஜ., தொண்டர்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.