பீஹாரில் இம்முறையும் வளர்ச்சிக்கான அரசை மக்கள் தேர்ந்து எடுப்பர்: அமித் ஷா நம்பிக்கை
பீஹாரில் இம்முறையும் வளர்ச்சிக்கான அரசை மக்கள் தேர்ந்து எடுப்பர்: அமித் ஷா நம்பிக்கை
ADDED : அக் 06, 2025 07:38 PM

புதுடில்லி; பீஹார் சட்டசபை தேர்தலில் இம்முறையும் வளர்ச்சிக்கான அரசை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீஹார் சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது. அதன் படி இரு கட்டங்களாக நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து, வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு உள்ளன.
இந் நிலையில், இம்முறையும் பீஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
பீஹார் சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாபெரும் ஜனநாயகத்தின் திருவிழாவுக்காக பீஹார் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது, பீஹாரை காட்டாட்சியில் இருந்து மீட்டு, வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான புதிய வழிகளை வழங்கி இருக்கிறது.
உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி என ஒவ்வொரு துறையிலும் பீஹாரானது இன்று வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களை கண்டுள்ளது. பீஹார் மக்கள் இந்த முறையும் மீண்டும் வளர்ச்சிக்கான அரசை தேர்ந்து எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுதாக இருக்கிறது.
இவ்வாறு அமித் ஷா தமது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
பாஜ தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;
பீஹார் சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழா என்பது தேர்தலே. இதுதான் நாட்டை வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் பாதையில் கொண்டு செல்லும் முக்கிய வழியாகும்.
இந்த தேர்தல் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் முன்னோக்கி அழைத்துச் செல்லும், மீண்டும் காட்டாட்சி வருவதை தடுக்கும். ஜனநாயகத்தின் தாய் ஆன பீஹார் மக்கள், பாஜ மற்றும் தேஜ கூட்டணியை மக்கள் தங்களின் ஓட்டுகளாலும், ஆசீர்வாதங்களினாலும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.