பீஹாரில் இலவச மின்சார திட்டம் அறிவிப்பு: தேர்தலுக்கு தயாராகிறார் நிதிஷ்குமார்
பீஹாரில் இலவச மின்சார திட்டம் அறிவிப்பு: தேர்தலுக்கு தயாராகிறார் நிதிஷ்குமார்
ADDED : ஜூலை 17, 2025 10:53 AM

பாட்னா : பீஹாரில் குடியிருப்புகளுக்கான இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் தேர்தலுக்கு மக்களை மயக்கும் செயல் என எதிர்கட்சியினர் குறை கூறியுள்ளனர்.
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அவரது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது : மக்கள் பயன்பெறும் வகையில் மி்ன் நுகர்வில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளேன். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 125 யூனிட் வரை எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இது வரும் ஆக.1 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 1. 67 கோடி பேர் பயன்பெறுவர்.
சூரியசக்தி மின்சார திட்டமும் மேலும் பரவலாக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு குதிர் ஜோதி யோஜனா மானியம் வழங்கப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் உற்பத்தி உபகரணங்களும் வழங்கப்படும், இது மின் நெருக்கடியைக் குறைக்க உதவும். அனைத்து மக்களும் எளிய மின்சாரம் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எதிர்கட்சியான ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. தற்போது, பீஹாரில் சுமார் 2.08 கோடி மின்சார நுகர்வோர் உள்ளனர். அவர்களில் 60 லட்சம் வீடுகளில் ஏற்கனவே ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.