சி.ஏ.ஏ.,வால் விமோசனம்: 40 ஆண்டு கால போராட்டங்களுக்கு பின் பீஹார் பெண்ணுக்கு குடியுரிமை கிடைத்தது
சி.ஏ.ஏ.,வால் விமோசனம்: 40 ஆண்டு கால போராட்டங்களுக்கு பின் பீஹார் பெண்ணுக்கு குடியுரிமை கிடைத்தது
ADDED : ஜன 08, 2025 02:18 AM

பாட்னா: பீஹாரில் பிறந்து வங்கதேசத்துக்கு சென்று திரும்பிய பெண்ணுக்கு, 40 ஆண்டு கால போராட்டங்களுக்குப் பின், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.
பீஹாரின் ஆராவைச் சேர்ந்தவர் சுமித்ரா பிரசாத் என்ற ராணி சாஹா என்பவர், 5 வயதில் தன் அத்தையுடன், கிழக்கு பாகிஸ்தானுக்கு கடந்த 1970ல் சென்றார்.
மளிகை கடை
அது பின்னர், வங்கதேசம் என்ற தனி நாடானது. கடந்த 1985ல் நாடு திரும்பிய அவர், பீஹாரின் கடிஹார் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதன்பின், திருமணமாகி மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன. அவரது கணவர், ஆராவில் சிறிய மளிகை கடையை நடத்தி வந்தார். கடந்த 2010ல், கணவர் இறந்த பின், அந்த கடையை சுமித்ரா பிரசாத் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இத்தனை ஆண்டுகளாக தன் விசாவை அவர் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளார். இதில் பல சிக்கல்களையும் அவர் சந்தித்தார். உள்ளூர் மக்கள் அவரை வங்கதேசம் செல்லும்படி கூறி வந்தனர். விசா புதுப்பிப்பது உள்ளிட்டவற்றுக்காக போலீஸ் ஸ்டேஷன், துாதரக அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருந்தது.
முதல் முறை
விசா புதுப்பிக்கும் அலுவலகம் கோல்கட்டாவுக்கு கடந்தாண்டு மாற்றப்பட்டது. அங்கு சென்றபோதுதான், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், இந்திய குடியுரிமை கோரலாம் என்ற தகவல் அவருக்கு தெரியவந்தது.
இந்த சட்டத்தின்படி, நம் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவற்றில் சிறுபான்மையினராக இருந்து நாடு திரும்பிய, ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, குடியுரிமை கேட்டு அவர் விண்ணப்பித்தார்.
விசாரணைகளுக்குப் பின், தற்போது அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. பீஹாரில், இந்த சட்டத்தின்கீழ் குடியுரிமை வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கும் மற்றும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்த சுமித்ரா பிரசாத், தன், 40 ஆண்டுகால விசா புதுப்பிக்கும் போராட்டங்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.