பசுக்களின் மடியை கத்தியால் வெட்டிய பீஹார் வாலிபர் கைது
பசுக்களின் மடியை கத்தியால் வெட்டிய பீஹார் வாலிபர் கைது
ADDED : ஜன 14, 2025 06:45 AM

சாம்ராஜ்பேட்: பசுக்களின் மடியை கத்தியால் வெட்டிய, பீஹார் வாலிபர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
பெங்களூரு, சாம்ராஜ்பேட்டில் வசிப்பவர் கர்ணன். பசுக்களை வளர்த்து, வாழ்க்கை நடத்துகிறார். இவருக்கு சொந்தமான மூன்று பசுக்கள் காட்டன்பேட் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் சுற்றின.
மூன்று மாடுகளின் மடியும் வெட்டப்பட்டு இருந்தது, விடிந்ததும் தெரிய வந்தது. காயமடைந்த பசுக்கள் மீட்கப்பட்டு, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
வக்பு வாரியம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சாம்ராஜ்பேட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மடி அறுக்கப்பட்ட மூன்று பசுக்களும் கலந்து கொண்டன.
இதனால் குறிப்பிட்ட ஒரு மதத்தினர், பசு மாட்டின் மடியை அறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., --- எம்.பி., மோகன், பல்வேறு ஹிந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர்.
மாடுகளின் மடி அறுக்கப்பட்டது குறித்து காட்டன்பேட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சையத் நஸ்ரு, 30, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் பீஹார் மாநிலத்தின் சம்பரான் பகுதியை சேர்ந்தவர்.
பெங்களூரில் சில ஆண்டுகளாக வசித்து வரும் அவர், மாடுகளின் மடி அறுக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ள தையல் கடையில் வேலை செய்ததும் தெரிந்தது.
குடிபோதையில் மாடுகளின் மடியை கத்தியால் அறுத்ததை ஒப்புக்கொண்டார். கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாட்டின் உரிமையாளர் கர்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
'மனநலம் பாதித்தவருக்கு வேலை கொடுத்தது ஏன்? மனநலம் பாதித்தவரால் எப்படி, மாடுகளின் மடியை சரியாக அறுக்க முடியும்? எங்களுக்கு மேலும் சிலர் மீது சந்தேகம் உள்ளது.
இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று தெரிய வேண்டும். எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார்.