பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தால் வாக்காளர் பட்டியல்... பரிசுத்தமானது!: ஓட்டு இயந்திரத்தில் வேட்பாளர் படம் ஒட்டுவதிலும் மாற்றம்
பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தால் வாக்காளர் பட்டியல்... பரிசுத்தமானது!: ஓட்டு இயந்திரத்தில் வேட்பாளர் படம் ஒட்டுவதிலும் மாற்றம்
ADDED : அக் 05, 2025 11:56 PM

பாட்னா: ''பீஹாரில் நடந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியால் வாக்காளர் பட்டியல் பரிசுத்தமானது. சட்டத்துக்கு உட்பட்டே இந்த பணி செய்து முடிக்கப்பட்டது. ஓட்டு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இனி இடம் பெறும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ஜனநாயக கடமை இதைத் தொடர்ந்து தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், பாட்னா சென்றிருந்தார்.
தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று முன் தினம் அவர், தேர்தல் நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது தீபாவளிக்குப் பின் வரும் சாத் பண்டிகை முடிந்ததும் தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். மேலும், நிறைய கட்டங்களாக நடத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், தன் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்ட ஞானேஷ்குமார் டில்லிக்கு புறப்படும் முன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பீஹாரில், 22 ஆண்டுகளுக்குப் பின் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால், மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்த குளறுபடிகள் அனைத்தும் களையப்பட்டுவிட்டன.
சட்டரீதியாகவே வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்தது. இந்த பணியால் பீஹார் வாக்காளர் பட்டியல் பரிசுத்தமாகி உள்ளது.
இதற்காக ஒத்துழைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாத் பண்டியையை எவ்வளவு உற்சாகத்துடன் கொண்டாடுகிறீர்களோ, அதே உற்சாகத்துடன், நம் ஜனநாயக திருவிழாவான தேர்தலையும் பீஹார் வாக்காளர்கள் கொண்டாட வேண்டும்.
ஒவ்வொருவரும், ஓட்டுப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். 243 தொகுதிகள் கொண்ட பீஹார் சட்டசபைக்கு நவ., 22க்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
இந்த தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 1,200 வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெப் கேமரா அதே போல் ஓட்டு போடும் முறையில் இந்த முறை ஒரேயொரு மாற்றம் செய் யப்பட்டுள்ளது.
முன்பு மின்னணு ஓட்டு இயந்திரத்தில் அரசியல் கட்சிகளின் சின்னம், வேட்பாளரின் பெயர்கள் அனைத்தும் கருப்பு -வெள்ளையில் இருக்கும். இதனால், வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் வாக்காளர்களுக்கு சிரமம் இருந்தது.
அதை களையும் வகையில், பீஹார் தேர்தலில் இருந்து மாற்றம் கொண்டு வந்துள்ளோம். அதன்படி மின்னணு ஓட்டு இயந்திரத்தில் உள்ள, 'பேலட்' காகிதத்தில் வரிசை எண் அளவு சற்று பெரிதாக இடம் பெறும். அதே போல், எளிதாக அடையாளம் காணும் வகையில், வேட்பாளரின் வண்ணப் புகைப்படமும் இடம் பெற்று இருக்கும்.
ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை. எனவே, மொபைல் போன்களுடன் வரும் வாக்காளர்களின் வசதிக்காக, ஓட்டுச்சாவடிக்கு வெளியே தனியே ஒரு அறை அமைக்கப்படும். அதில் வாக்காளர்கள் தங்களது மொபைல் போன்களை வைத்துவிட்டு, ஓட்டளிக்க செல்லலாம்.
ஒட்டுப்பதிவு வெளிப்படையாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.