பயங்கரவாதிகளுக்கு 'சார்ஜர்' கொடுத்தேன் பஹல்காம் தாக்குதலுக்கு உதவியவர் 'பகீர்'
பயங்கரவாதிகளுக்கு 'சார்ஜர்' கொடுத்தேன் பஹல்காம் தாக்குதலுக்கு உதவியவர் 'பகீர்'
ADDED : அக் 05, 2025 11:51 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காமில், 26 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீரைச் சேர்ந்த நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர், பயங்கரவாதிகளை நான்கு முறை சந்தித்ததாகவும், அப்போது அவர்களுக்கு, ' மொபைல் போன் சார்ஜர் ' கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்., 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திவிட்டு ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர் அமைப்பின் துணை அமைப்பான, 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' பயங்கரவாதிகள் சுலைமான், ஜிப்ரான், ஹம்சா ஆப்கனி ஆகிய மூவரை கடந்த ஜூலையில் நம் ராணுவம் சுட்டுக்கொன்றது.
'ஆப்பரேஷன் மகாதேவ்' என்ற பெயரில் நடந்த இந்த வேட்டையின்போது பகுதியளவு எரிந்த நிலையில் கிடந்த, 'மொபைல் போன் சார்ஜர்' கைப்பற்றப்பட்டது.
அதன் உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார் விசாரணையில், பயங்கரவாதிகளுக்கு உதவியது காஷ்மீரைச் சேர்ந்த முகமது யூசுப் கட்டாரி என தெரியவந்தது. அவரை, செப்., இறுதியில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பயங்கரவாதிகளையும் நான்கு முறை ஸ்ரீநகர் அருகேயுள்ள ஜபர்வான் மலைப்பகுதியில் சந்தித்ததாகவும், அவர்களுக்கு மொபைல் போன் சார்ஜர் கொடுத்து உதவியதாகவும் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதிகளுக்கு மலைப்பகுதியில் வழிகாட்டியதில் கட்டாரி முக்கிய பங்காற்றியதும் தெரியவந்துள்ளது.
கட்டாரி கைது செய்யப்பட்டுள்ளது காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் பயங்கரவாத வலையமைப்பை அகற்றுவதில் முக்கிய பங்காற்றும் என்பதால், இது குறித்து கூடுதல் தகவலை தர அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்த வழக்கு விரைவில், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.