ADDED : ஏப் 03, 2025 07:40 PM
அலிப்பூர்: அலிப்பூர் பகுதியில் ஒருவரைத் தாக்கி, அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றதாகக் கூறப்படும் மூன்று மைனர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பக்தவர்பூரில் வசிக்கும் அமித் சிங் என்பவர், கடந்த மாதம் 27ம் தேதி திரிவேணி காலனி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பாட்டிலால் தாக்கப்பட்டார்.
நிலைகுலைந்து கீழே விழுந்த அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்த சிறுவர்கள், அமித் சிங் வந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து அலிப்பூர் காவல் நிலையத்தில் அமித் சிங் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.
விசாரணை நடத்தி வந்த போலீசார், இந்த வழிப்பறி கொள்ளை தொடர்பாக மூன்று மைனர்களை கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் மொபைல் போன் மீட்கப்பட்டன. கூர்நோக்கு இல்லத்துக்கு சிறுவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

