ADDED : பிப் 04, 2025 06:41 AM

மைசூரு: சாமுண்டி மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
அரண்மனை நகரமான மைசூரில் பல்வேறு ஆன்மிக தலங்கள் உள்ளன. இவற்றில், சாமுண்டி மலையின் சாமுண்டீஸ்வரி கோவிலும் ஒன்று. ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இக்கோவிலை மேம்படுத்த, மத்திய அரசின், 'பிரசாத்' எனும் யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மிக மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ், 45.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மாநில அரசும், சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது.
இந்நிலையில், கன மழை காரணமாக, சாமுண்டி மலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தின் இத்திட்டத்தால், குஷியடைந்த கே.எஸ்.ஆர்.டி.சி., மைசூரு பிரிவு, டி.பி.ஆர்., எனும் முழு திட்ட அறிக்கை தயாரித்து, மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏற்கனவே மைசூரில் இருந்து பெங்களூருக்கு மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நகருக்கென மின்சார பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
எனவே, நகருக்கென 200 மின்சார பஸ்கள் இயங்கினால், பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும், நெரிசலும் ஏற்படாது. இந்த பஸ்கள் சாமுண்டி மலை தவிர, எல்.என்.டி., இன்போசிஸ், லிங்காம்புதி ஏரி உட்பட பல பகுதிகளிலும் இயக்கலாம். மின்சார பஸ்களுக்கு தனி ரீசார்ஜிங் அமைப்பு தேவை. பஸ் இயக்க வேண்டுமானால், 145 கிலோவாட் மின்சாரம் தேவைப்படும்.
மின்சார பஸ்களை சார்ஜிங் செய்ய டிப்போக்களில் ரீசார்ஜ் மையம் அமைக்க வேண்டும். இதற்காக, ஏற்கனவே பன்னிமண்டபம், குவெம்பு நகர், விஜயநகர், சட்டகள்ளி டிப்போக்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்க, போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பிட்டுள்ளது.

