ஜார்க்கண்டில் பறவை காய்ச்சல்; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஜார்க்கண்டில் பறவை காய்ச்சல்; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ADDED : பிப் 10, 2025 04:16 AM

ராஞ்சி; ஜார்க்கண்டில் பறவை காய்ச்சல் பரவுவதால், மாநிலம் முழுதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. தலைநகர் ராஞ்சியில் பிர்சா வேளாண் பல்கலையில் உள்ள பண்ணையில், 250 கினி கோழிகள், 400 சீன கோழிகள் திடீரென உயிரிழந்தன.
இறந்த பறவைகளின் மாதிரிகள், போபால் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில், 'எச்5என்1' வகை பறவை காய்ச்சல் பாதிப்பால், அவை இறந்தது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, ஜார்க்கண்ட் அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து, ஜார்க்கண்டில் வேறு எங்காவது பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, மாநிலம் முழுதும் கட்டுப்பாட்டு அறைகள் திறந்து பறவைகளின் மாதிரிகளை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிர்சா வேளாண் பல்கலையில் இருந்து, 1 கி.மீ., சுற்றளவில், அனைத்து பறவைகளையும் கொல்லவும் 10 கி.மீ., வரை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட ராஞ்சியில், மாவட்ட வேளாண்மை மற்றும் கால்நடைத் துறையினர் ஒருங்கிணைந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.