'பிட் காயின்' முறைகேடு வழக்கு ஆயுதப்படை ஐ.ஜி.,யிடம் விசாரணை
'பிட் காயின்' முறைகேடு வழக்கு ஆயுதப்படை ஐ.ஜி.,யிடம் விசாரணை
ADDED : பிப் 22, 2024 07:12 AM

பெங்களூரு: பிட்காயின் முறைகேடு வழக்கு தொடர்பாக, கர்நாடகா ஆயுதப்படை ஐ.ஜி., சந்தீப் பாட்டீலிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு ஜெயநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி, 29. தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சா வாங்கிய வழக்கில், 2020ல் சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அரசின் பல்வேறு இணையதளங்களை முடக்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியது தெரிய வந்தது. தவிர பிட்காயின் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது.
பிட்காயின் முறைகேட்டில், பா.ஜ., அரசியல்வாதிகள் சிலரது வாரிசுகள் பெயரும் அடிபட்டது. இதனால் விசாரணையை அப்படியே முடங்கியது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
சி.ஐ.டி.,யின் கீழ் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீகிருஷ்ணாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, பிட்காயின்களை சி.சி.பி., போலீசார் சேதப்படுத்தியதாக, எஸ்.ஐ.டி., அளித்த புகாரில், காட்டன்பேட் போலீசில் வழக்குப்பதிவானது.
ஸ்ரீகிருஷ்ணா மூலம் பிட்காயினை மாற்றி,4 லட்சம் ரூபாயை வங்கிக்கணக்கு மாற்றியதாக, சி.சி.பி., முன்னாள் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் பாபு, சைபர் நிபுணர் சந்தோஷ் ஆகியோர், கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பிட்காயின் வழக்கை, சி.சி.பி., போலீசார் விசாரித்தபோது, சி.சி.பி., இணை கமிஷனராக இருந்த சந்தீப் பாட்டீலுக்கு, எஸ்.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர் தற்போது தற்போதைய ஆயுதப்படை ஐ.ஜி.,யாக இருக்கிறார்.
அதன்படி, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன், நேற்று மதியம் சந்தீப் பாட்டீல் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தி, வழக்கு தொடர்பான சில தகவல்களை பெற்றனர்.