பிட்காயின் முறைகேடு; சி.சி.பி., - டி.எஸ்.பி., கைது
பிட்காயின் முறைகேடு; சி.சி.பி., - டி.எஸ்.பி., கைது
ADDED : அக் 08, 2024 06:16 AM

பெங்களூரு : பிட்காயின் முறைகேடு வழக்கில், சி.சி.பி., - டி.எஸ்.பி., கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு குமாரசாமி லே - அவுட் போலீசார், கடந்த 2020ல் தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சா விற்றதாக, பெங்களூரு ஜெயநகரின் ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகி, 29, என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், அரசின் பல துறைகளின் இணையதளங்களை முடக்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியது தெரிந்தது.
மேலும் தனியார் நிறுவனங்களின் இணையத்தை முடக்கி, பிட்காயின்களை திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 31 கோடி ரூபாய் மதிப்பிலான 9 பிட்காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சி.சி.பி., போலீசார் விசாரித்தனர்.
பிட்காயின் முறைகேட்டில் பா.ஜ., தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பா.ஜ., ஆட்சியில் இருந்ததால், ஸ்ரீகிருஷ்ணாவிடம் மேலும் விசாரிக்காமல், வழக்கை அப்படியே விட்டுவிட்டனர்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பிட்காயின் முறைகேடு பற்றி விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இந்த வழக்கில் சில சி.சி.பி., அதிகாரிகள், பிட்காயின்களை சேதப்படுத்தி சாட்சிகளை அழிக்க முயன்றது பற்றி, காட்டன்பேட் போலீசில், சிறப்பு புலனாய்வு குழுவினர் புகார் செய்தனர். அந்த புகாரின்பேரில் சி.சி.பி., - டி.எஸ்.பி., ஸ்ரீதர் பூஜாரி மீது வழக்குப்பதிவானது.
விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். கடந்த பிப்ரவரியில், விதான் சவுதா அருகே, ஸ்ரீதர் பூஜாரியை கைது செய்ய, விதான் சவுதா போலீசார் முயன்றனர். இரண்டு போலீஸ்காரர்கள் மீது காரால் மோதிவிட்டு தப்பினார்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராக ஸ்ரீதர் பூஜாரிக்கு உத்தரவிட்டது. விசாரணையின்போது அவரை கைது செய்யவும் தடை விதித்து, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், ஸ்ரீதர் பூஜாரி விசாரணைக்கு ஆஜராகி வந்தார். ஆனால் அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை. நேற்றும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.
பல கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் சொல்லாததால், அவரை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கைது செய்தனர்.