ADDED : பிப் 22, 2024 07:10 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்காக, கர்நாடகாவில் ஏ.பி.டி., நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ., 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., 25, காங்கிரஸ், ம.ஜ.த., மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேச்சை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.
அப்போது, பதிவான ஓட்டுகளில் பா.ஜ., 51.75 சதவீதம்; காங்., 32.11 சதவீதம்; ம.ஜ.த., 9.74 சதவீதம்; மற்றவை 3.92 சதவீதம் பெற்றிருந்தன.
வரும் 2024 லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை, தனியார் 'டிவி' சேனல் மற்றும் இணையதளத்துக்காக ஏ.பி.டி., நிறுவனம் நடத்தியது. நேற்று அதன் முடிவுகளை வெளியிட்டது.
இதன் அடிப்படையில், பா.ஜ., 57.27 சதவீத ஓட்டுகள் பெற்று, 26 தொகுதிகளையும்; காங்கிரஸ், 28.45 சதவீத ஓட்டுகள் பெற்று, இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.ஜ.த., 1 சதவீத ஓட்டுகள் பெற்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறுவது சந்தேகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.64 சதவீதம் பேர், பிற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், 11.63 சதவீதம் பேர், கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பின்படி, 2019ஐ விட, 2024ல் பா.ஜ.,வுக்கு 5.52 சதவீத ஓட்டுகள் கூடுதலாகவும்; காங்கிரசுக்கு 3.66 சதவீத ஓட்டுகளும்; ம.ஜ.த.,வுக்கு 8.74 சதவீத ஓட்டுகளும் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில், ம.ஜ.த., தற்போது பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதை, கருத்துக் கணிப்பு எடுத்த நிறுவனம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
எனவே, 'பா.ஜ., வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ள 26 தொகுதிகளில், எங்கள் கட்சி ஜெயிக்கும் இடங்களும் அடங்கியுள்ளது' என, ம.ஜ.த.,வினர் தெரிவிக்கின்றனர்.