போதை வியாபாரியிடம் அரசு சரண் ஆம் ஆத்மி மீது பா.ஜ., குற்றச்சாட்டு
போதை வியாபாரியிடம் அரசு சரண் ஆம் ஆத்மி மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : ஜன 07, 2025 09:18 PM
சண்டிகர்:“பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி அரசு அதைத் தடுக்க தவறி விட்டது,” என, மாநில பா.ஜ., துணைத் தலைவர் அரவிந்த் கண்ணா கூறினார்.
பஞ்சாப் மாநில பா.ஜ., துணைத் தலைவர் அரவிந்த் கண்ணா அறிக்கை:
ஆம் ஆத்மியின் மூன்றாண்டு ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் முழுதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. அதைத் தடுக்க ஆம் ஆத்மி அரசு தவறி விட்டது. முதல்வர் பகவந்தசிங் மான் தலைமையிலான அரசுக்கு, போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த திறமை இல்லை என்பது இதன் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு பலியாகியுள்ளனர். இதற்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த 2022ம் ஆண்டு, 'நான்கு வாரங்களுக்குள் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும்' என, முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்தார். ஆனால், அந்த வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது.
அதேபோல, கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்குள் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்போம் என கூறியிருந்தார். அதுவும் நிறைவேறவில்லை. ஆண்டுதோறும் வாக்குறுதி அளிக்கும் முதல்வர் பகவந்த் சிங் மானிடம், உறுதியான நடவடிக்கை எடுக்கும் திறமை இல்லை.
போதைப்பொருள் வியாபாரிகளிடம் அரசு சரணடைந்துள்ளது என்பது உண்மை. வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார். நேர்மையான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

