வெளிநாட்டு சக்திகளுடன் காங்., கைகோர்த்ததாக...குற்றச்சாட்டு பா.ஜ., - எம்.பி.,க்கள் பேச்சால் பார்லி.,யில் புயல்
வெளிநாட்டு சக்திகளுடன் காங்., கைகோர்த்ததாக...குற்றச்சாட்டு பா.ஜ., - எம்.பி.,க்கள் பேச்சால் பார்லி.,யில் புயல்
ADDED : டிச 06, 2024 01:01 AM

புதுடில்லி,
அமெரிக்காவைச் சேர்ந்த ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும், புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்புடன் கைகோர்த்து, நம் பார்லிமென்ட் நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி முடக்குகிறது. வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் நம் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என, பா.ஜ., - எம்.பி.,க்கள் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து, இரு சபைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணி கட்சியினர் லோக்சபாவுக்கு நேற்று கருப்பு நிற ஜெர்கின் அணிந்து வந்தனர். அதில், 'மோடியும், அதானியும் ஒண்ணு' என்றும், 'அதானி பாதுகாக்கப்படுகிறார்' என்றும் குறிப்பிடப்பட்ட, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு இருந்தது.
இதை, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டித்தார். அவர் பேசுகையில், ''எதிர்க்கட்சிகளின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் கருப்பு உடை அணிந்து வந்து சபையில், 'பேஷன் ஷோ' நடத்துகின்றனர். இது சபையின் கண்ணியத்தை குலைக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்,'' என்றார்.
லோக்சபா ஒத்திவைப்பு
இதைத் தொடர்ந்து, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே பேசியதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த, ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும், 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் குறித்த செய்தி வெளியிடும் அமைப்பு' நம் நாட்டுக்கு எதிராக பல்வேறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
பெகாசஸ் உளவு, கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் மீது சந்தேகம், ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் உள்ளிட்ட விவகாரங்களை வெளியிட்டது.
இவை பார்லிமென்ட் கூடுவதற்கு முன் வெளியிடப்படுவதை கவனிக்க வேண்டும். அந்த செய்தியை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி பார்லி., நடவடிக்கைகளை முடக்குவதை வழக்கமாக வைத்துள்ளது.
இவர்கள் ஓ.சி.சி. ஆர்.பி., உடன் கூட்டு சேர்ந்து, நாட்டின் வளர்ச்சியை சிதைக்க சதி செய்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
இதே விவகாரம் ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. பா.ஜ., - எம்.பி., சுதான்ஷு திரிவேதி பேசியதாவது:
துாதரக அளவிலும், பொருளாதார ரீதியாகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், நம் நாட்டின் நிறுவப்பட்ட அமைப்புகள் மற்றும் பொருளாதார, சமூக நலன்கள் மீது வெளிநாட்டு சக்திகள் தாக்குதலை முன்னெடுக்க துவங்கியுள்ளன.
திட்டமிட்ட சதி
இந்த சக்திகள், ஓ.சி.சி.ஆர்.பி., அமைப்புக்கு, நிதி உதவி அளிப்பதாக பிரான்ஸ் நாட்டு ஊடகம் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அமைப்புக்கு அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் ஆதரவாக உள்ளார்.
இந்திய தேர்தல்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருப்பதாக, ரஷ்ய அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது. இது நம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.
இவை இயல்பாக நடக்கிறதா அல்லது திட்டமிட்ட சதியா என்பது தெரிய வேண்டும். இயல்பாக நடப்பது என்றால், இதுகுறித்து சபையில் விவாதிக்கலாம். திட்டமிட்ட சதி எனில், விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தங்கள் மீது வீண்பழி சுமத்துவதாக, சபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.